சனி, ஞாயிறு அன்று நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக 7.10 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில், இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். தமிழகத்தில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழக மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 3,03,95,103 பேரும், பெண்கள் 3,14,23,321 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,758 பேரும் உள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு 6,66,464 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1,72,211 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைப்பது ஆகியவற்றுக்கான படிவங்களை வருகிற 8.12.2022 வரை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் 12, 13 (சனி, ஞாயிறு), 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தேர்தல் அறிவித்திருந்தது. மேலும், www.nvsp.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘வாக்காளர் உதவி’ கைபேசி செயலில் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.2023ம் ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் சேர்க்க படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெயர் சேர்க்க 6ஏ படிவத்தை அளிக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 2023ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி கடந்த சனி மற்றும் ஞாயிறு (12, 13 தேதி) ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய 7 லட்சத்து 10,274 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் கடந்த 12ம் மற்றும் 13ம் தேதி  இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 7 லட்சத்து 10,274 பேர் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். அதன்படி பெயர் சேர்க்க மட்டும் 4,44,019 பேரும், ஆதார் எண் இணைக்க 67,943 பேரும், நீக்கம் செய்ய 77,698 பேரும், முகவரி மாற்றம் (திருத்தம்) செய்ய 1,30,614 பேர் என மொத்தம் 7,10,274 பேர் விண்ணப்பித்துள்ளனர்’’ என்று கூறினார். மீண்டும் வருகிற 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய 2  நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Related Stories: