×

இந்தோனேசியா சென்றார் பிரதமர் மோடி ஜி-20 மாநாடு இன்று தொடக்கம்

புதுடெல்லி: ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இந்தோனேசியா, இத்தாலி, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து கடந்த 1999ல் ஜி-20 அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி தீவில் இன்று தொடங்குகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இந்தோனேசியா தலைநகர் பாலி புறப்பட்டு சென்றார். பாலி தீவின் விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு பாரம்பரியமான வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக  பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டின்  போது, உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு,  சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவை  குறித்து தலைவர்களுடன் விரிவான விவாதங்களை நடத்த உள்ளேன். பாலியில் உள்ள இந்திய மக்களிடம் உரையாற்ற உள்ளேன்’ என கூறி உள்ளார். சுமார் 45 மணி நேரம் பாலி தீவில் தங்கும் மோடி, அங்கு 20 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று அவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போல அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங்கையும் மோடி தனித்தனியாக சந்தித்து பேசவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ,  அடுத்த ஜி-20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைப்பார். டிச. 1 முதல் ஜி-20 தலைவர்  பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கும். மாநாட்டை ஒட்டி பாலியில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 12 போர்க்கப்பல்கள், 13 ஹெலிகாப்டர்கள், 4 போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.


Tags : Modi ,Indonesia ,G-20 summit , Indonesia, Prime Minister Modi, G-20 summit, opening
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை