×

வங்க கடலில் அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்தம்: 19ம் தேதி முதல் மழை பெய்யும் வானிலை மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே 16ம் தேதி (நாளை) புதிய காற்றழுத்தம்  உருவாகும். அது மேலும் வலுப்பெற்று 18ம் தேதி தமிழக கடலோரம் நெருங்கி வரும். அதைத் தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில்  மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையால், கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக 122 ஆண்டுகளுக்கு பிறகு 44 சென்டி மீட்டர் சீர்காழியில் பெய்துள்ளதே சான்று. தற்போது ஒரு சில இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வெயில் காணப்படுகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, நாளை (16ம் தேதி) மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாக உள்ளது. இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரத்தை நெருங்கி வரும். 18ம் தேதி அன்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

பின்னர் 19ம் தேதி இரவு தமிழக கடலோர பகுதிக்குள் நுழையும். அன்று முதல் 20, 21ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், மன்னார் வளைகுடா பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.  சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.


Tags : Andaman ,Bengal Sea , Bay of Bengal, Andaman, new pressure, rain on 19th, Meteorological Department, information
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!