×

சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.1000: கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேரடி ஆய்வு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவிகளை வழங்கினார். சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், பல ஏக்கரில் பயிர்களை மூழ்கடித்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும், 4 ஆயிரத்து 655 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 கால்நடைகள் உயிரிழந்துள்ளதோடு, 271 ஓட்டு வீடுகள் இடிந்துள்ளது, 231 குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.  கடலூர் அருகே கீழ்பூவாணிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பரவனாற்று வெள்ள நீரில் மூழ்கியுள்ள 140 ஹெக்டர் விளைநிலங்களை பார்வையிட்டார். கீழ்பூவாணிக்குப்பத்தில் வைத்திருந்த வெள்ள பாதிப்பு புகைப்படங்களை முதல்வர் பார்வையிட்டார். அப்போது அதிகாரிகள் பாதிப்பு பற்றி விளக்கி கூறினர். தொடர்ந்து கீழ்ப்பூவாணிக்குப்பம் கிராமத்தில் நடந்து சென்று நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் குறிஞ்சிப்பாடியில் கூரைவீடு சேதமடைந்த 10 பேருக்கு ரூ.41 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை, பெராம்பட்டு, அக்கறை, ஜெயங்கொண்டப்பட்டினம்,  கீழக்குண்டலப்பாடி, வேலகுடி, உள்ளிட்ட இடங்களில் பாதிப்புகளை பார்வையிட்டு  விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து வல்லம்படுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடலூர்  மாவட்ட திமுக சார்பில் சார்பில்  2500 பேருக்கு  வேட்டி, புடவை, 10 கிலோ அரிசி, மளிகை  பொருட்களின் தொகுப்பு, போர்வை, உள்ளிட்ட  நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது. கடலூர்  மாவட்டத்தில் இரண்டரை மணி நேரம் முதல்வர் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு,  சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் சபா.  ராஜேந்திரன், ஐயப்பன், சிந்தனைச்செல்வன், ராதாகிருஷ்ணன், மற்றும்   வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர். மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கனமழையால் அதிகளவு பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் சம்பா மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 3 நாளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 160க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகின.

இந்நிலையில் மழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியம் பச்சைபெருமாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள 600 பேரை முதல்வர் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் காபி வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், உமையாள்பதி வெள்ளநீரில் மூழ்கி கிடந்த சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்களை பார்வையிட்டார். அப்போது, விவசாயிகள் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நெற்பயிரை எடுத்து முதல்வரிடம் காண்பித்தனர். அப்போது, முதல்வர்வெள்ளநீர் வடிந்துள்ளதா? என கேட்டார். அதற்கு விவசாயிகள் ஆம் என கூறினர்.

பின்னர் கொள்ளிடம் வட்டார வேளாண் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் காணொலி காட்சிகளை முதல்வர் பார்வையிட்டு அதிகாரிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, வேட்டங்குடி பகுதி விவசாயிகள், முதல்வரிடம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கும்படி கோரினர். இதையடுத்து சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில், மழையால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு, மெய்யநாதன், ரகுபதி, செந்தில்பாலாஜி, எம்பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜமோகன் மற்றும் கலெக்டர் லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விவசாய சங்கத்தினர் நிவாரணம் வேண்டி கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். சீர்காழி, தங்கம்பாடி மக்களுக்கு தலா ரூ.1000: இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார். நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேலும் கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*கல்லூரி மாணவி செல்பி

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க சீர்காழி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈசானிய தெரு அருகே வந்தபோது சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்த துரை மகள் பி.காம் மூன்றாம் ஆண்டு மாணவி நச்சத்திரா, முதல்வரின் காரை நோக்கி சென்றார். இதை பார்த்த முதல்வர் உடனே காரை நிறுத்தி மாணவியிடம் விசாரித்தார். பின்னர், மாணவி முதல்வருக்கு பழம், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து முதல்வருடன் மாணவி செல்பி எடுத்துக்கொண்டார். மாணவி நச்சத்திரா, சிறு வயது முதலே மு.க.ஸ்டாலின் சீர்காழி வரும்போதெல்லாம் காரை நிறுத்தி அவரிடம் நலம் விசாரித்து பிஸ்கட், பழம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

* தேசிய பேரிடர் மாவட்டமாக  அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல்வரிடம் அளித்த மனுவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழைக்கு நஞ்சை நிலங்கள் 80 சதவீதம் பாதித்ததோடு , அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் வீணாகிவிட்டது. விவசாயிகள் மீது கருணை உணர்வுடன் உதவிக்கரம் நீட்டி அவர்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

முதல்வரிடம் டெல்டா  மாவட்ட விவசாய சங்க தலைவர் இளங்கீரன் அளித்த மனுவில்,  சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி  உள்ளதால், இதனை காப்பாற்றுவதற்கு உடனடியாக ஏக்கர் ஒன்றுக்கு 1 மூட்டை  யூரியா, ஒரு மூட்டை டிஏபி, பொட்டாஷ் உரங்களை மானியமாக வழங்க வேண்டும்.  முழுமையாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம்  இழப்பீடாக வழங்க வேண்டும். சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் இந்த மாத  மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு இன்சூரன்ஸ்  கட்டுவதற்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என  கூறியுள்ளார்.



Tags : Sirkazhi ,Tharangambadi ,Cuddalore ,Mayiladuthurai ,Chief Minister ,M.K.Stal , Rain, Victim, Ration Card, Rs.1000, Direct Inspection, Chief M.K.Stalin, Order
× RELATED சீர்காழி பேருந்து நிலையத்தில்...