தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜூனா விருது

புதுடெல்லி: தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்த வீரர்களுக்கு, ஒன்றிய இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சகம் தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதும் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், கடந்த 4 ஆண்டுகளில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ விருது, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த செயல்திறனுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருது, தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காதுகேளாதோர் பேட்மின்டன் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற மதுரையை சேர்ந்த ஜெர்லின் அனிகாவுக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 25 வீரர், வீராங்கனைகள் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சரியார் விருது 4 பேருக்கும், வாழ்நாள் சாதனைக்கான தயான்சந்த் விருது 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு, வரும் 30ம் தேதி மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்குவார்.

Related Stories: