அமெரிக்க சதி புகார் இம்ரான் திடீர் பல்டி

இஸ்லாமாபாத்: தனது ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் அமெரிக்க சதி இருப்பதாக புகார் கூறி வந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான், தற்போது அமெரிக்காவுடன் இணக்கமான உறவு வேண்டும் என்று திடீர் பல்டி அடித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராக இருந்த போது, கடந்த ஏப்ரலில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் வெளியேற்றப்பட்டார். தனது தனிப்பட்ட வெளியுறவு கொள்கைகள் பிடிக்காமல் அப்போதைய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ், ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்கா சதி செய்து அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டதாக இம்ரான் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றால், அமெரிக்கா உடன் இணக்கமான உறவை விரும்புவதாக இம்ரான் கூறியுள்ளார். இது குறித்து இங்கிலாந்து நாட்டின் வணிக நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``பாகிஸ்தானில் நிலவும் அரசியல் ஸ்திரமற்றத் தன்மையை போக்க தேர்தல் ஒன்றே ஒரே வழி. மீண்டும் பிரதமராக வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்கா மீது குற்றம் கூற மாட்டேன். அந்நாட்டுடன் இணக்கமான உறவையே விரும்புகிறேன்,’’ என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: