×

சுபநிகழ்ச்சிகள், ஓட்டல்களை களைகட்ட செய்யும் பிரியாணி உயிரை பறிக்கும் உணவாக மாறுகிறதா? 4 நாட்களில் 3 பேர் மரணம்; வீதிவீதியாக முளைக்கும் கடைகள்

சென்னை: சுப நிகழ்ச்சிகள், ஓட்டல்களை களைகட்ட செய்யும் பிரியாணி விருந்து தற்போது உயிரை பறிக்கும் உணவாக மாறி வருகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், சென்னையில் 4 நாட்களில் 3 பேர் உயிரிழந்ததும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. பாரசீகத்தில் தோன்றிய பிரியாணி கலாச்சாரம் அந்நாட்டு வணிகர்கள் மூலம் தெற்காசிய நாடுகளில் பரவி அதன் பின்பு உலகம் முழுவதும் ‘பிரியாணி’ என்ற உணவுப் பொருள் பிரபலம் அடைந்தது. இதன் மூலம் அரபு நாடுகளில் பிரபலமடைந்த பிரியாணி தற்பொழுது உலகம் முழுவதும் பரவி ஒவ்வொரு நாட்டிலும் பிரியாணி பிரியர்கள் என தனியாக ஒரு கூட்டமே உள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் முதலில் பிரபலமடைந்த பிரியாணி, தற்போது அனைத்து இடங்களிலும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மதிய உணவாக இதை உண்டு வந்த மக்கள், காலம் மாறி காலை, மாலை, இரவு, அதிகாலை என நேரம் காலம் இல்லாமல் கண்ட நேரங்களிலும் உண்ணத் தொடங்கி விட்டனர் பிரியாணியை. எந்த ஒரு பொருளையும் அளவோடு பயன்படுத்தினால் நாம் பல ஆண்டுகள் அதை பயன்படுத்தலாம். அது நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால், அளவுக்கு அதிகமானால் அதன் வாயிலாக பக்க விளைவுகள் கண்டிப்பாக உண்டு என்பதை பல்வேறு மருத்துவ நிகழ்வுகள் நமக்கு அறிவுறுத்தி வந்தாலும் நாவுக்கு அடிமையான சென்னைவாசிகள் தற்போது அதிகப்படியான பிரியாணி மோகத்திற்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அதற்கு காரணம், வீதிகளில் தேடினாலே போதும் தெருவுக்கு ஐந்து பிரியாணி கடைகள் உள்ளன. அந்த அளவிற்கு வியாபாரமும் நடக்கிறது. இதனால் ஒரு காலக்கட்டத்தில் மதிய உணவாக இருந்த பிரியாணி சென்னைவாசிகளுக்கு தற்போது இரவு உணவாகவும் மாறிவிட்டது. இரவு நேரங்களில் பிரியாணி கடை முன்பு வேலை முடிந்து செல்லும் ஆண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிக் கொண்டு செல்கின்றனர். இரவு முழுவதும் வயிறு நிரம்ப பிரியாணி சாப்பிட்டுவிட்டு அப்படியே தூங்குகின்றனர். இதன் பக்க விளைவுகளை அவர்கள் அறிவதில்லை.

இதன் காரணமாகவே, சென்னையில் தற்போது பிரியாணி சாப்பிட்டுவிட்டு உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்படி உயிரிழந்தவர்களில் ஒருவர், சென்னை ஓட்டேரி ஜமாலியா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான மதன்குமார் (38). இவர், கடந்த 11ம் தேதி இரவு 2 மணிக்கு மட்டன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று, அயனாவரம் மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த பவானி (47) என்ற பெண் உறவினர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பிரியாணி சாப்பிட்டு வீட்டிற்கு வரும் வழியில் நேற்று முன்தினம் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

மேலும், வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி 8வது தெருவை சேர்ந்த மகாவிஷ்ணு (21) என்ற வாலிபர், நண்பர்களுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிவிட்டு சிக்கன் ரைஸ் மற்றும் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீட்டில் வந்து படுத்து உறங்கி உள்ளார். இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 21 வயது வாலிபர் எவ்வாறு பிரியாணி சாப்பிட்டதில் உயிரிழக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பினர். இது, இவ்வாறு இருக்க செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதியில் பெண்கள் காப்பகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.

இதில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படி பிரியாணியால் கடந்த 4 நாட்களில் 3 உயிரிழப்புகள் மற்றும் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரியாணியில் அப்படி என்னதான் இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இரவு நேரங்களில் பிரியாணி என்னும் உணவுப் பொருள் எந்த அளவிற்கு மனிதர்களை மோசமாக பாதிக்கக் கூடியது என்பதற்கு உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என மருத்துவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

* இரவில் சாப்பிடுவது நல்லதா? மருத்துவர் விளக்கம்
பெரம்பூரை சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது: பிரியாணி என்பதும் ஒரு வகையான உணவுப்பொருள். நாம் இட்லி, தோசை போன்ற உணவுப் பொருட்களை எவ்வாறு எடுத்துக் கொள்கிறோமோ அதேபோன்றுதான், பிரியாணியையும் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரியாணியை சுத்தமாக செய்ய வேண்டும் என்றால் நெய், சுத்தமான எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து செய்ய வேண்டும். ஆனால், தற்பொழுது பிரியாணியை மலிவாக தர வேண்டும் என்ற நோக்கில் நெய்க்கு பதிலாக டால்டா பயன்படுத்தப்படுகிறது.

டால்டா என்னும் பொருளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் உள்ளன. நமது உடலுக்கு நல்ல கொழுப்பு வகைகள் மட்டுமே தேவைப்படுகிறது. சுத்தமான கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களில் நல்ல கொழுப்புகள் உள்ளன. மாறாக, நாம் டால்டாவை பயன்படுத்தும்போது அதில் உள்ள கெட்ட கொழுப்புகள் நமது உடலுக்குள் செல்கிறது. தற்போதுள்ள பிரியாணி கடைகளில் பாமாயில் மற்றும் டால்டா அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவை இரண்டிலும் கெட்ட கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் ரத்தக்குழாயில் சென்று அடைப்பை ஏற்படுத்துகிறது.

உடலில் நிறைய இடங்களில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். ஆனால் இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்படும் போது அது மரணத்தை தோற்றுவிக்கிறது. குறிப்பாக மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும்போதும், இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும்போதும் மரணம் ஏற்படுகிறது. பெரிய ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் ஆயில்களை வாங்கி வந்து சிறிய சிறிய பிரியாணி கடைகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அதில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு அந்த கெட்ட கொழுப்பு செல்கிறது.

பிரியாணி சாப்பிடும் போது சிக்கன் 65 போன்ற பொரித்த உணவுகளையும் எடுத்துக் கொள்கின்றனர். அதுவும், கெட்ட கொழுப்பு நிறைந்த எண்ணெய்களால் சமைக்கப்படுகின்றன. இதனால் உடம்புக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற உணவுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவம் படிந்து பாதிப்பை ஏற்படுத்தும். பகல் நேரங்களில் பிரியாணி எடுத்துக் கொள்வதற்கும் இரவு நேரங்களில் பிரியாணி எடுத்துக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பகல் நேரங்களில் நாம் சாப்பிட்டுவிட்டு வேலை செய்வோம். அல்லது நடப்போம் பல்வேறுவிதமான அசைவுகள் இருக்கும்.

இதன் மூலம் ஓரளவுக்கு பிரியாணி ஜீரணம் ஆகிவிடும். ஆனால் இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு நாம் தூங்கி விடுவோம். பொதுவாக, இரவு நேரங்களில் ஜீரண உறுப்புகள் முழுவதுமாக  வேலை செய்யாது. அதனால் பிரியாணி ஜீரணமாகாமல் அப்படியே தங்கி விடுகிறது. இரவு நேரங்களில் இதயம் அடைத்து விட்டால் முதலில் வியர்க்கும். அதன்பின் நாம் சுயநினைவை மீண்டும் கொண்டு வருவதற்குள் அடுத்தடுத்த நிகழ்வுகள் நிகழ்ந்து விடுகின்றன. இதன் மூலமே இரவு நேரங்களில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சென்னையை பொறுத்தவரை இரவு நேரங்களில் தற்போது பிரியாணி மோகம் அதிகரித்து வருவதால் மதுபான விடுதிகளை 10 மணிக்கு மூடுவதை போல மாலை 6 மணிக்கு பிரியாணி கடைகளையும் மூடினால் வருங்காலங்களில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படாமல் இருப்பார்கள். முடிந்தவரை இரவு நேரங்களில் குறைவான அளவு இட்லி, தோசை போன்ற ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொண்டு, பழ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகளை இரவு நேரங்களில் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* சோதனை அவசியம்
பிரியாணி கடை, ஓட்டல் உள்ளிட்ட கடைகளுக்கு செல்லும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளில் உள்ள இறைச்சிகளை மட்டும் சோதனை செய்கின்றனர். பிரியாணி மற்றும் சமையலில் எந்த மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்த வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. மறுசுழற்சி எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து பெரிய அளவில் சோதனைகளை நடத்துவது கிடையாது. சென்னையில் உள்ள ஓட்டல்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், உணவு பாதுகாப்புத் துறையில் மிகக் குறைவான ஆட்களே உள்ளதாகவும், இதனால் அனைத்து ஓட்டல்களிலும் அவர்கள் முறையாக சோதனை செய்வது என்பதும் சாத்தியமில்லாத ஒரு நிகழ்வாக உள்ளது. இதன் மூலம் பெயரளவில் ஒரு துறை செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : Is the biryani that used to weed out restaurants, become a life-killing dish? 3 deaths in 4 days; Shops springing up along the streets
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...