வியாசர்பாடியில் பரிதாபம் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கல்லூரி மாணவன் திடீர் சாவு: போலீசார் விசாரணை

சென்னை: வியாசர்பாடியில் நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டு, இரவு வீட்டுக்சென்று தூங்கிய கல்லூரி மாணவன் திடீரென மரணமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி எஸ்ஏ காலனி 8வது தெரு, 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீதாபதி. இவரது மகன் மகாவிஷ்ணு (21), தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். நேற்று முன்தினம் மகாவிஷ்ணுவின் நண்பரான ராம்குமார் பிறந்த நாளை முன்னிட்டு, ரெட்டேரி 200 அடி சாலையில் உள்ள தனியார் மதுபான கூடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மகா விஷ்ணு மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டிற்கு வந்த மகாவிஷ்ணு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். எப்பொழுதும், மகா விஷ்ணுவுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருக்கும்போது இரவு 11 மணி அளவில் எந்தவித சுயநினைவும் இல்லாமல் மகாவிஷ்ணு கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை எழுப்ப முயற்சி செய்தபோது மூச்சு பேச்சு இல்லை. எனவே, உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மகாவிஷ்ணுவை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால், மகாவிஷ்ணுவின் உறவினர்கள் செய்வதறியாது தவித்தனர். சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்று மகாவிஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் மகாவிஷ்ணு எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட மகாவிஷ்ணு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தாரா அல்லது இரவு நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டதா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: