பல்வேறு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்தி திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம்: திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: இந்தி திணிப்புக்கு எதிரான அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திமுக மாணவர் அணி மாவட்ட,  மாநகர, மாநில அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று  மதுரை, கருப்பாயூரணி, பாண்டிகோவில் அருகில் உள்ள எம்.டி. மகாலில், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமையில், இணை, துணைச் செயலாளர்கள் பூவை ஜெரால்டு, மன்னை சோழராஜன், எஸ்.மோகன், சேலம் தமிழரசன், எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், கவிகணேசன், எம்.ஏ.எம்.ஷெரிப், அதலை செந்தில்குமார், எம்.வெங்கடேஷ் குமார் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர்  அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்தி திணிப்பை எதிர்த்து, தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி இணைந்து தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படவேண்டுமென்று  தலைவர் ஆணையிட்டதன் பேரில், தமிழ்மொழி காக்கும் உன்னத போராட்டத்தில், இளைஞர் அணியும்-மாணவர் அணியும் இணைந்து போர்க்களம் காணுகின்ற வாய்ப்பை வழங்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர் அணியின் செம்மார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

இந்தியா முழுவதும் இந்தி ஒன்றே ஒரே மொழி என்ற ஆதிக்க தன்மையோடு, அனைத்து மொழிகளின் உரிமைகளையும், மாநில உரிமைகளும் பாதிக்கின்ற வகையில் இந்தியை திணிக்க நினைக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ. அரசின் எதேச்சதிகார போக்கினை எதிர்க்கும் வகையிலும், அவரவர் தாய்மொழியின் அவசியத்தை உணரச் செய்யும் வகையிலும் இந்தியாவின் தென் மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், அந்த மாநிலங்களில் உள்ள இந்தி திணிப்புக்கு எதிரான அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவது,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாசிச ஒன்றிய பா.ஜ. அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தல், பரப்புரை செய்தல் மற்றும்  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: