சூப்பர் பவர் - 90 வெடிபொருளை பயன்படுத்தி ராஜஸ்தானில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு: 650 பயணிகள் உயிர்தப்பினர்; ‘உபா’ சட்டத்தில் வழக்குபதிவு

உதய்பூர்: ராஜஸ்தானில் சூப்பர் பவர் - 90 என்ற வெடிபொருளை பயன்படுத்தி ரயில் தண்டவாளம் தகர்ப்பு முயற்சி நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக 650 பயணிகள் உயிர் தப்பினர். உபா சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் மாநிலம் உதய்பூர் - அகமதாபாத் ரயில் பாதையில் ஓடா ரயில்வே பாலத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென வெடிச் சத்தம் ஏற்பட்டது. அதையறிந்த கிராம மக்கள் உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த வெடிச் சத்தத்தால் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. அதனால் தண்டவாளத்தின் குறுக்கே சிவப்பு துணியை கட்டி வைத்தனர்.

இந்த ரயில் பாதையில் அசர்வா  - உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்லும் சில மணி நேரங்களுக்கு முன்,  ரயில் தண்டவாளத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம்  காரணமாக மேற்கண்ட ரயில், துங்கர்பூரில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் 650 பயணிகள் பயணம்  செய்தனர். பொதுமக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வெடிவிபத்தால் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து ஆய்வு செய்தனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், ரயில் தண்டவாளத்தை தகர்க்க சூப்பர்  பவர் - 90 வகை வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதும், இதற்காக சூப்பர்  பவர் - 90 வெடிபொருள் அடைக்கப்பட்ட பாக்ஸ் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.

மிகவும் வலிமையான மற்றும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் டெட்டனேட்டர் வகையை சேர்ந்த வெடிபொருள் என்றும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரயில்வே மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘டெட்டனேட்டர்கள் மூலம் ரயில் தண்டவாளத்தை தகர்க்கும் சதி நடந்துள்ளது. ஆனால் வெடிபொருளின் தீவிரம் குறைவாக இருந்ததால் தண்டவாளத்தில் விரசல் மட்டும் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த வெடிவிபத்து தொடர்பாக ‘உபா’ சட்டத்தின் கீழ் அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இரண்டு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். அதில் ஒன்று, தனி மாநிலம் கோரும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த தெற்கு ராஜஸ்தானைச் சேர்ந்த  தீவிரவாதிகளாக இருக்கலாம். மற்றொன்று, நாடு முழுவதும் சமீபத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் தொடர்புடைய நபர்களின் கைவரிசையாக இருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘உதய்பூரிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள ரயில் பாதையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ரயில்வேயின் ஏடிஎஸ், என்ஐஏ மற்றும் ஆர்பிஎஃப் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்’ என்றார். இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ‘ஓடா பாலத்தின் ரயில் தண்டவாளத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். ரயில்வே நிர்வாகத்தின் விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்’ என்றார்.

Related Stories: