×

கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், முகவரி மாற்றம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,03,95,103 பேரும், பெண் வாக்காளர்கள் 3,14,23,321 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,758 பேரும் உள்ளனர்.தமிழகத்தில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது.

இங்கு மொத்தம் 6,66,464 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த அளவாக சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதியில் 1,72,211 வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023ன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைப்பது ஆகியவற்றுக்கான படிவங்களை இன்று முதல் 8.12.2022 வரை அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக வருகிற 12, 13 (சனி, ஞாயிறு), 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம் வழங்கும்போது முகவரி சான்றிதழ், ஆதார் அட்டை, மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பு ரசீது ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வயது சான்றிதழ் அளிக்க வேண்டும். ஒரு புகைப்படமும் வழங்க வேண்டும். www.nvsp.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் ‘வாக்காளர் உதவி’ கைபேசி செயலில் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.2023ம் ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் சேர்க்க படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெயர் சேர்க்க 6ஏ படிவத்தை அளிக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் 2023ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும். ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் (சனி), நேற்று (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய 7 லட்சத்து 10,274 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் நேற்று (12ம் தேதி), நேற்று (13ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 7 7,20,374 பேர் பெயர் சேர்க்க, நீக்கம், மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். அதன்படி பெயர் சேர்க்க மட்டும் 4,44,019 பேரும், ஆதார் எண் இணைக்க 67,943 பேரும், நீக்கம் செய்ய 77,698 பேரும், முகவரி மாற்றம் செய்ய 1,30,614 பேர் என மொத்தம் 7,10,274 பேர் விண்ணப்பித்துள்ளனர்” என்று கூறினார். மீண்டும்  வருகிற 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


Tags : Tamil Nadu ,Chief Electoral Officer , 7.10 lakh people applied for inclusion and deletion in the voter list in the last two days of the special camp: Tamil Nadu Chief Electoral Officer informs
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...