நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது: வைகை அணைக்கு நீர்வரத்து 3,592 கனஅடியாக சரிவு

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் வைகை அணைக்கு இன்று நீர்வரத்து 3592 கன அடியாக உள்ளது. இந்தநீர் உபரிநீராக ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. வைகை அணைக்கு இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே மழை காரணமாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் மேல் காணப்பட்டது.

இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வைகை அணை இந்தாண்டு 2வது முறையாக நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 10538 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்பட்டது.

இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், வைகை அணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 3592 கன அடியாக உள்ளது. அந்த தண்ணீர் உபரி நீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 70.1 அடியாக உள்ளது.

Related Stories: