×

கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் உடைந்தது 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு: திருத்தணி அருகே பரபரப்பு

திருத்தணி: திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலம் உடைந்துவிட்டதால் 10க்கு மேற்பட்ட கிராம மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தின் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. திருத்தணி வட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொசஸ்தலை ஆறு, நந்தி ஆற்றில் அதிகளவில் மழைநீர் வந்துகொண்டிருக்கிறது.

இதன்காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவாலங்காடு  ஒன்றியம் லட்சுமிவிலாசபுரம் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் சேதம் அடைந்து அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதன்காரணமாக லட்சுமி விலாசபுரம், பாகசாலை, சின்னமண்டலி, களம்பாக்கம், கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த செஞ்சி மதுரா கண்டிகை, சிற்றம்பாக்கம், தென் காரணை, வேப்பஞ்செட்டி, பேரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

மேற்கண்ட பகுதி மக்கள், மணவூர், திருவாலங்காடு ஆகிய ரயில் நிலையங்களுக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கும் தொழில் சம்பந்தமாக செல்கின்றவர்களும் கடும் சிரமத்துக்கு ஆட்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்
ளது. இதுவும் பெரும் சிரமத்துக்கு காரணமாக உள்ளது. எனவே கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் அமைத்து மக்கள் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று மேற்கண்ட கிராம மக்கள், சமூகநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

* ஒரே நாளில் 13 செ.மீ. மழை
திருத்தணி பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏரி, குளங்களுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய கிணறுகளிலும் தண்ணீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும்  மகிழ்ச்சியில் உள்ளனர். திருத்தணி பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகப்படியான மழை பெய்தது. இதையடுத்து இந்தாண்டுதான் திருத்தணி பகுதியில் ஒரே நாளில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, பெரும்பாலான விவசாயிகள் நெல், வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையின் காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துவிட்டது. ‘’சேதம் அடைந்த பயிர்களை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Stir ,Tiruthani , Kosasthalai river footbridge broken, traffic cut off for 10 villages: Confusion near Tiruthani
× RELATED சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு: கொடைக்கானலில் பரபரப்பு