×

வீட்டின் படிக்கட்டில் வழுக்கி கிணற்றில் விழுந்தார்; பிளாஸ்டிக் பைப்பை பிடித்துகொண்டு உயிருக்கு போராடிய மூதாட்டி மீட்பு: கோயம்பேட்டில் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் சக்திநகரை சேர்ந்தவர் லட்சுமி(65). நேற்றிரவு கழிவறைக்கு செல்வதற்காக படிக்கட்டு வழியாக நடந்துவந்துள்ளார். அப்போது  நிலைதடுமாறி படிக்கட்டில் வழுக்கிவிழுந்த மூதாட்டி, அங்குள்ள சுமார் 25 அடி உயர உறை கிணற்றில் விழுந்துவிட்டார். ஆனால் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி, கிணற்றின் உள்ளே உள்ள பிளாஸ்டிக் பைப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார்.

ஆனால் இரவு என்பதால் அவரது சத்தம் கேட்டு ஆட்கள் யாரும் வரவில்லை. இதனால் இரவு முழுவதும் பைப்பை பிடித்துக்கொண்டு மூதாட்டி போராடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை எழுந்த குடும்பத்தினர் மூதாட்டியை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்து தேட  ஆரம்பித்தபோது உறை கிணற்றில் இருந்து மூதாட்டியின் சத்தம் வந்ததும் எட்டி பார்த்தனர். அப்போது அங்கு மூதாட்டி தொங்கிக்கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் கொடுத்த தகவல்படி, மதுரவாயல் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில், வீரர்கள் உறை கிணற்றில் இறங்கி மூதாட்டியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இரவு முழுவதும் கிணற்றில் இருந்ததால் மூதாட்டி அதிர்ச்சியுடன் காணப்பட்டார்.  மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் பாராட்டினர்.

Tags : Coimbatore , He slipped on the stairs of the house and fell into the well; Rescue of old lady who fought for her life by holding plastic pipe: stir in Coimbatore
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...