பினராயி விஜயன் புதிய சாதனை: தொடர்ந்து அதிக நாட்கள் முதல்வர்

திருவனந்தபுரம்: கேரளாவில் 2021ம் ஆண்டுக்கு முன்பு வரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறுவது வழக்கமாக இருந்தது. ஒருமுறை காங்கிரஸ் கூட்டணி அரசு என்றால், அடுத்த முறை இடதுசாரி கூட்டணி ஆட்சி அமைக்கும். ஆனால் இந்த வழக்கத்தை கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இடதுசாரி கூட்டணி முதல்வர் பினராயி விஜயன் மாற்றியமைத்தார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது தலைமையிலான இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அடுத்ததாக 2021ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரது எதிர்ப்பையும் பொய்யாக்கி பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. அதன்படி தொடர்ந்து 2வது முறையாக கேரளாவில் ஆட்சியை தக்க வைத்தது. இந்தநிலையில் பினராயி விஜயன் மேலும் ஒரு புதிய சாதனையை படைத்து உள்ளார். கேரளாவில் இதுவரை அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை அச்சுதமேனனுக்கு மட்டுமே இருந்தது.

இவர் கடந்த 1970 அக்டோபர் 4ம் தேதி முதல் 1977 மார்ச் 25ம் தேதி வரை தொடர்ந்து 2,364 நாட்கள் முதல்வராக இருந்தார். தற்போது இந்த சாதனையை பினராயி விஜயன் முறியடித்து உள்ளார். இவர் முதல்வராக பதவியேற்று நேற்றுடன் 2,364 நாட்கள் நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து கேரளாவில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமை பினராயி விஜயனுக்கு கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: