மும்பையில் தொடங்கிய ‘லிவ்-இன்’ டெல்லியில் முடிந்தது; காதலியை துண்டு துண்டாக வெட்டி வீசிய காதலன் சிக்கினான்!5 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியதால் போலீசார் நிம்மதி

புதுடெல்லி: மும்பை காதலியுடன் லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலன், அவரை டெல்லி அழைத்து சென்று துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நிலையில், 5 மாதங்களுக்கு பின் தற்போது போலீசாரிடம் சிக்கினான். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாட் பகுதியை சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் (26) என்ற இளம்பெண், மும்பையில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும் டெல்லியை சேர்ந்த அஃப்தாப் அமீனுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் லிவ்-இன் உறவில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இவர்களது செயலை பெண்ணின் பெற்ேறார் கண்டித்தனர்.

இந்த நிலையில் மும்பையில் இருந்து டெல்லிக்கு தனது காதலியை அஃப்தாப் அமீன் அழைத்து வந்தார். டெல்லியின் மெஹ்ராலியில் இருவரும் வசித்து வந்தனர். இதற்கிடையே தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அஃப்தாப் அமீனிடம்  ஷ்ரத்தா வாக்கர் வலியுறுத்தினார். ஆனால் அதற்கு அவர் செவிசாய்க்கவில்லை. ஏதேதோ காரணங்களை கூறி திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தார். ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு  ஷ்ரத்தா வாக்கர் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்தார்.  இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், கடந்த மே 18ம் தேதி  ஷ்ரத்தா வாக்கரின் கழுத்தை நெரித்து அஃப்தாப் அமீன் கொன்றார்.

பின்னர் ஷ்ரத்தாவின் உடலை பல துண்டுகளாக வெட்டி எடுத்து, சாக்குமூட்டையில் கட்டி டெல்லி நகரில் பல பகுதிகளில் வீசிவிட்டு தலைமறைவானார். இவ்வழக்கை விசாரித்து வந்த டெல்லி போலீசார், கிட்டத்தட்ட 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த  அஃப்தாப் அமீனை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த அஃப்தாப் அமீன் - ஷ்ரத்தா வாக்கர் ஜோடி, மும்பையில் உள்ள நிறுவனத்தின் கால்சென்டரில் பணியாற்றி வந்தனர். இவர்களது லிவ்-இன் வாழ்க்கையை பலரும் விமர்சித்து வந்ததால், இருவரும் டெல்லி வந்தனர். இங்கும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் வாழ்க்கையை தொடர்ந்தனர்.

இருவரும் டெல்லியில் தங்கியிருக்கும் விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியாது. அவரது பேஸ்புக் பக்கத்தை பார்த்துதான் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டனர். காரணம், அந்த பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பல்வேறு பதிவுகளை போட்டு வருவார். தான் இமாச்சலப் பிரதேசத்துக்குச் செல்ல இருப்பதாக கடைசியாக பேஸ்புக்கில் பதிவிட்டார். ஆனால், அதன் பின் பல நாட்களாக எவ்வித பதிவும் பேஸ்புக்கில் போடவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முயன்றும் அதற்கும் பதில் இல்லை. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற அச்சத்துடன் கடந்த 8ம் தேதி சத்தர்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து பார்த்தனர்.

அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. அதையடுத்து விகாஸ் மெஹ்ராலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தலைமறைவான அஃப்தாப் அமீனின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தோம். அதில், டெல்லியில் வீசி எறிந்து செல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள், ஷ்ரத்தா வாக்கரின் உடல் பாகங்கள் தான் என்ற உண்மையும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தோம். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின்னர் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. குற்றவாளி அஃப்தாப் அமீனை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறினர்.

Related Stories: