திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

செய்யூர்: மதுராந்தகம் தெற்கு ஒன்றியத்தில் நேற்று திமுக பொது உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்று, நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தால்தான், மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்ய முடியும் என க.சுந்தர் எம்எல்ஏ ஆலோசனை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சி தெற்கு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், 15வது கழக தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம், திமுக பொது உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று மதுராந்தகம் அருகே பெருவேலி கிராமத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், சக்கரபாணி, சுபத்ராதேவி குமார், சகாயராஜ், தனபால், பத்மா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சிவகுமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், மாவட்ட குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜா ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நீங்களும் அதில் கலந்து கொண்டிருப்பீர்கள்.

அவர் அறிவித்ததை போல், நீங்கள் அனைவரும் வாக்காளர்களை சந்தித்து, அவர்களுக்கு திமுக அரசின் திட்டங்கள் முறையாக போய் சேருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களை சேர்க்க வேண்டும். நாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால்தான், மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்ய முடியும். கடந்த 9ம் தேதி புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 17 வயது நிறைவு பெற்ற புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். இதில் 2 பெண்கள், 2 இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என க.சுந்தர் எம்எல்ஏ ஆலோசனை வழங்கினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுஜாதா ஜெய்சங்கர், பிரியா சக்கரபாணி, லதா மனோகரன், செல்லம்மாள் ஜெயராமன், தரணி பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

Related Stories: