திருவள்ளூர் அருகே இன்று அதிகாலை குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி: மனைவி, பேரன் படுகாயம்: தூங்கிக்கொண்டிருந்தபோது சோகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர்  ஒன்றியம் சிற்றம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவன் (67). கூலி தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (60). இவர்கள் ஓலையால் வேயப்பட்ட மண் குடிசையில் வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தேவன், முனியம்மாள் மற்றும் பேரன் சுமித் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால்  தேவன் வீட்டின் மண் சுவர், ஈரப்பதமாக இருந்தது. இன்று அதிகாலையில் 3 பேரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென குடிசை வீட்டின் சுவர் இடிந்து தூங்கி கொண்டிருந்த தேவன், முனியம்மாள், சுமித் ஆகியோர் மீது விழுந்தது. இதில் அவர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளை அகற்றி பார்த்தனர். தேவன், உடல் நசுங்கி இறந்து கிடந்தார். முனியம்மாள், சுமித் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இருவரையும் மீட்டு திருவள்ளூர்  மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தகவலறிந்து கடம்பத்தூர் எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: