மதசார்பின்மை கோட்பாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி: கே.எஸ்.அழகிரி பேட்டி

ஆலந்தூர்: முன்னாள் பிரதமர் நேருவின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி  தலைவர் கேஎஸ்.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத், டில்லி பாபு, அசன்  மௌலானா எம்எல்ஏ, மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பகத்சிங், தளபதி பாஸ்கர், கடல் தமிழ்வாணன், எம்ஆர்.வாசு, கோகுலகிருஷ்ணன், தனசேகரன், ஆதன் ரமேஷ் உள்பட பலர் நேரு உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர் கேஎஸ். அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது; தேசிய நெடுஞ்சாலை  இந்தியர்களுக்கு பெருமை தரக்கூடியது. அதனை உருவாக்கி தந்தவர் நேரு. ஏராளமான அணைகள் கட்டி விவசாயத்தை மேம்படுத்தினார். சிறப்பான கல்வியை கொண்டுவந்தார். இந்தியாவின் அனைத்து இடங்களிலும்  பிஎஸ்என்எல் சேவை கொண்டுவரப்பட்டது. தற்போது அது அழிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டு கொலைகாரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள்.

அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? ராஜீவ்  காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லதல்ல. கூட்டணி வேறு,  கொள்கை வேறு. காங்கிரஸ் - திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு  இருக்கும். ஆனால் மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: