×

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் சிறைக்கைதிகள் 322 பேர் விடுதலை, 187 பேர் மனு நிராகரிப்பு: வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை..!!

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறைக்கைதிகள் 322 பேரை தமிழ்நாடு அரசு விடுதலை செய்துள்ளது. நன்னடத்தை அடிப்படையில் 509 சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்த நிலையில் 322 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.  தமிழக அரசு பரிந்துரைத்த நிலையிலும் எஞ்சிய 187 சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துவிட்டார். 2021 செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அனுப்பிய கோப்புகள் மீது படிப்படியாக ஆளுநர் முடிவு எடுத்து வருகிறார். 187 பேர் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அரசு மீண்டும் அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளது.

வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை:

கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் ஆளுநர் கோப்பில் கையெழுத்திட்டதால் விடுதலை செய்யப்பட்டனர். வீரப்பன் கூட்டணிகளான ஆண்டியப்பன், பெருமாள் இருவரும் 30 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டனர். 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்யுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் கோரி வந்தனர். சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று ஆண்டியப்பன், பெருமாள் இருவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு திமுக அரசு பரிந்துரைத்தது. பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த திமுக அரசின் பரிந்துரைக்கு, ஆளுநர் ரவி காலம் தாழ்த்தி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து ஆண்டியப்பன், பெருமாள் 2 பேரும் கோவை சிறையில் இருந்து விடுதலை ஆகியுள்ளனர்.

தாமதத்திற்காக உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர்:

7 பேர் விடுதலை விவகாரத்திலும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் கிடப்பில் போட்டதால் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். ஆளுநரின் செயல்படாத தன்மையை கண்டித்த உச்சநீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்தது. உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில் ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்று வீரப்பன் கூட்டாளிகளை விடுவித்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

விடுதலையாகமலேயே மரணமடைந்த மாதையன்:

35 ஆண்டுகள் சிறையில் இருந்த வீரப்பன் அண்ணனான மாதையனையும் விடுவிக்குமாறு திமுக அரசு பரிந்துரைத்தது. பரிந்துரை உடனடியாக ஏற்கப்பட்டிருந்தால் சிறையில் மாதையன் மரணம் அடைந்திருக்க நேர்ந்திருக்காது என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காலம் தாழ்த்தாமல் முன்னரே ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால் மாதையனும் முன்பே விடுதலை ஆகியிருப்பார் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


Tags : Anna ,Veerappan , Anna's birthday, prisoners, release
× RELATED அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சம்மர் கேம்ப்