×

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு பிரபல ரவுடிகள் 8 பேர் ஒப்புதல்..!!

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு பிரபல ரவுடிகள் 13 பேரில் எட்டு பேர் ஒப்புதல் அளித்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்  ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர், தமிழகத்தில் குறிப்பிட்ட சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு எடுத்தனர். தொடர்ந்து அது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கலும் செய்திருந்தனர். குறிப்பாக மோகன்ராம், தினேஷ், நரைமுடி கணேசன், சத்தியராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலிப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா ஆகியோரும் கடலூர் சிறையில் இருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6 நீதிபதி சிவகுமார் முன்னிலையில் ஆஜராகினர்.

அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி. தான் மனுத்தாக்கல் செய்ய முடியும் என எதிர்தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில், அந்த வழக்கை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஏற்கனவே நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். தொடர் விசாரணையின் போது இன்று (14.11.2022) ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, 13 பேரின் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அதில், சத்தியராஜ், கலைவாணன், மாரிமுத்து, திலிப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம், சிவா, செந்தில் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு தாங்கள் ஒத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

குறிப்பாக உண்மை கண்டறியும் சோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் இருக்க வேண்டும் என சத்தியராஜ், சுரேந்தர், மாரிமுத்து ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர். இதில் தென்கோவன் என்ற சண்முகம் ஏற்கனவே காவல்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டதால் சோதனைக்கு ஒப்புக்கொள்ள முடியாது என கூறினார். நரைமுடி கணேசன், தினேஷ், மோகன்ராம், செந்தில் ஆகிய 4 பேர் இன்று ஆஜராகவில்லை. எனவே வரும் 17ம் தேதி ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் கூடுதலாக சிலரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : Minister ,Nehru ,Ramajayam , Ramajayam murder case, fact finding test, 8 raiders
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்