×

காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் களைகட்டும் சின்ன வெங்காயம் அறுவடை-பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் கோரிக்கை

காரியாபட்டி : காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் சின்னவெங்காயம் அறுவடை தொடங்கியுள்ளது. இந்த பயிருக்கு நிரந்தர காப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவில் உள்ள ஆவியூர், அரசகுளம், மாங்குளம், குரண்டி, எஸ்.மறைக்குளம், சித்தனேந்தல், சொக்கனேந்தல், பெரிய ஆலங்குளம், முஷ்டக்குறிச்சி மற்றும் நரிக்குடி பகுதியில் இசலி, பனைக்குடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். பயிருக்கு தேவையான உரம் மற்றும் மருந்துகளை அடித்து பாதுகாக்கின்றனர். ஆனால், இந்தாண்டு சாகுபடி செய்த சின்ன வெங்காயத்தில் திருகல் நோய் ஏற்பட்டு மகசூல் குறைந்ததாக தெரிவித்தனர்.

3 லட்சம் வரை வருமானம்:

ஒரு ஏக்கரில் நன்றாக சின்ன வெங்காயம் விளைந்தால், மூன்று லட்சம் வரை வருமானம் கிடைக்கும். ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்ற காலத்தில் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்தது. தற்போது ஒரு கிலோ தரமான வெங்காயம் ரூ.70க்கு விற்கப்படுகிறது. ஆனால், விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால், ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் வைத்தும், களை எடுப்பு, உரம் மற்றும் மருந்து தெளித்து பாதுகாத்து மகசூல் எடுக்கும்போது செலவு அதிகமாக உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:

காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு சாகுபடி முறை குறித்து வேளாண்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிரந்தர பயிர் காப்பீடு வழங்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

சாகுபடி முறை:

சின்ன வெங்காயம் சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 ஆகியவையாகும். ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் சின்னவெங்காய சாகுபடி முறைக்கு ஏற்ற பருவம் ஆகும். மண்ணின் கார, அமிலத்தன்மை 6-7க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத, செம்மண் நிலம் சின்ன வெங்காயம் சாகுபடி முறைக்கு உகந்ததாகும். ஒரு ஏக்கருக்கு விதை வெங்காயம் 1,500 கிலோ தேவைப்படும். விதை வெங்காயத்தை 10 செ.மீ இடைவெளியில், பாத்திகளின் இருபுறங்களிலும் ஊன்ற வேண்டும். விதை வெங்காயம் நட்டபின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 3 நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர்பாய்ச்சினால் போதுமானது.

களை நிர்வாகம்:

சின்ன வெங்காயம் சாகுபடியை பொறுத்தவரை விதை வெங்காயம் நடவு செய்த 30 நாள் கழித்து களை எடுத்து, மேல் உரமிட்டு, பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து, நிலத்தை களையில்லாமல் பராமரிக்க வேண்டும்.அனைத்து பகுதியிலும் நீர்பாய்ச்ச வேண்டும்.

பயிர் பாதுகாப்பு முறை:

சின்ன வெங்காய பயிரில் சாறு காணப்படும். இதை உறிஞ்சும் பூச்சிகளின் பாதிப்பு பரவலாக காணப்படும். இதை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு சதவீதம் தெளிக்க வேண்டும்.

இலைப்புள்ளி நோய்:

சின்ன வெங்காயத்தில் இலைப்புள்ளி நோய் பரவலாக காணப்படும்.
அதை கட்டுப்படுத்த இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம் தெளிக்க வேண்டும்.

கீழ்த்தண்டு நோய்:

சின்ன வெங்காயத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கீழ்த்தண்டு அழுகல் நோய் ஏற்படும். இதை டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம், 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வடிகட்டி, வெங்காய ஒட்டும் திரவத்துடன் தாள்கள் நன்கு நனையுமாறு காலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

இலை கருகல் நோய்களுக்கு:

சின்ன வெங்காயத்தில் இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை, 100 லிட்டர் நீரில் கலந்து, ஒட்டும் திரவத்துடன் தெளிக்க வேண்டும். வளர்ச்சிப் பருவத்தில் அமிர்தக் கரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

அறுவடை:

சின்ன வெங்காயத்தின் இலைகள் 75 சதவீதம் காய்ந்து விட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்திருக்கும் என்பதை என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடைக்கு 7 நாட்கள் முன்பு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர், இலைகளை பறித்து சுத்தம் செய்ய வேண்டும். அதன்பின் நிழலில் காயவைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

Tags : Kariyapatti ,Narikudi , Kariyapatti: Onion harvesting has started in Kariyapatti, Narikudi area. Government action to provide permanent insurance for this crop
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி