×

பில்லூர் அணை பகுதியில் சிக்னல் கிடைக்காததால் ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படும் பழங்குடியின மக்கள்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைப் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைக்கு போதிய அளவில் பி.எஸ்.என்.எல் சிக்னல் கிடைக்காதால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் பி.எஸ்.என்.எல் டவர் ஏற்படுத்த வேண்டுமென பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை பகுதி உள்ளது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் கெம்மாரம்பாளையம், நெல்லித்துறை ஊராட்சிகளுக்குட்பட்ட சேத்துமடை,கொடியூர், நெல்லிமரத்தூர்,பூச்சிமரத்தூர்,செங்கலூர், திட்டுக்குலை,குண்டையூர்,கடம்பன்கோம்பை, நீராடி, பில்லூர், கீழ் பில்லூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களை சேர்ந்த 600 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக இங்கு பி.எஸ்.என்.எல் சிக்னல் போதிய அளவில் கிடைப்பது இல்லை. இதனால் இப்பகுதியில் மக்கள் செல்போனே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு கடையில் குடும்ப அட்டதாரர்களிடம் கைரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மலை கிராமங்களில் இருந்து வரும் குடும்ப அட்டைதாரர்கள் காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காத்திருந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதிலும் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 10 பேருக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கும் நிலை நீடித்து வருகிறது. இதனால் பழங்குடியின மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே இப்பகுதியில் பி.எஸ்.என்.எல் டவர் ஏற்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றுமுன்தினம் ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மக்கள் ரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் இணையவழி சேவை கிடைக்காததால் கொட்டும் மழையில் நனைந்தபடி நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்: பில்லூர் அணை பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதியில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள போதிய இணையதள வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் தனியாக டவர் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுதொடர்பாக தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இந்நிலையில் மானார் பகுதியில் தற்போது பி.எஸ்.என்.எல் டவர் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அப்பகுதியில் ஏற்கனவே தனியார் செல்போன் நிறுவன நெட்வொர்க்குகள் முழுமையாக கிடைத்து வருகின்றன. எனவே மானார் பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ள பி.எஸ்.என்.எல் டவரை பில்லூர் அணை பகுதியில் ஏற்படுத்தினால் இப்பகுதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பயன் பெறுவர் என கூறினர்.

Tags : Pillur dam , Mettupalayam: Adequate BSNL signal for ration shop operating in Pillur Dam area near Mettupalayam.
× RELATED பில்லூர் அணை வறண்டது குடிநீர் தட்டுப்பாடு தாண்டவமாடும் அபாயம்