×

செம்பட்டி அருகே பாழடைந்து கிடந்தது ரூ.1.62 கோடியில் புத்துயிர் பெறும் சமத்துவபுரம்

சீரமைப்பு பணிகள் விறுவிறு… பொதுமக்கள் வரவேற்பு...

நிலக்கோட்டை : செம்பட்டி அருகே ரூ.1.62 கோடியில் 100 வீடுகள், சாலை, பள்ளி கட்டிடம் உட்பட சமத்துவபுரத்தில் உள்ள கட்டிடங்களை புதுப்பிக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பட்டியை அடுத்த ஆதிலட்சுமிபுரத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் உருவாக்காப்பட்ட சமத்துவபுரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் புறகணித்ததால், பல வீடுகள் பழுதடைந்தும், தெருக்கள், சாலைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்தும் காணப்பட்டது. அங்கு செயல்பட்டு வந்த துவக்கப்பள்ளி, நூலகம், சமுதாயக்கூடம், ரேஷன் கடைகள் உள்ளிட்ட கட்டிட்ங்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இந்த நிலை குறித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து சமத்துவபுரத்தை நேரடியாக பார்வையிட்ட அமைச்சர், மழைக்காலத்திற்கு முன் அங்குள்ள பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என முடிவு செய்து உடனடியான சமத்துவபுரம் மேம்பாட்டு சிறப்பு நிதியின் கீழ் ரூ.1.62 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை துவக்கிவைத்தார். அதே போல அப்பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், சாலை, வீடுகள் புனரமைப்பு என பணிகளையும் தனித்தனியே பிரித்து வழங்கி போர்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதனால் இச்சமத்துவபுரத்திலுள்ள சுமார் 300 மீட்டர் பிரதான தார்ச்சாலை மற்றும் 8 இடங்களில் உள்ள குறுக்கு சாலைகள் முழுமையாக பெயர்த்தெடுக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது, அதே போல சமுதாயக்கூடம், துவக்கப்பள்ளி கட்டிடம், நூலகம், சிறுவர் பூங்கா, நியாயவிலைக்கடை, மேல்நிலை குடிநீர் தொட்டி, சாக்கடை கால்வாய் மற்றும் சிறுபாலங்கள் என அனைத்தையும் சீரமைத்து வர்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட 100 வீடுகளில் பலத்த சேதமடைந்த 40க்கும் மேற்பட்ட வீடுகள் செப்பனிடப்பட்டு, சிமென்ட் பூசி, வர்ணம் அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. அடுத்ததாக லேசாக சேதமடைந்த வீடுகளின் ஜன்னல், கதவு, புதிய மின்சார வயர் அமைத்தல் மற்றும் கழிவறை உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி அனைத்து வீடுகளையும் பராமரிப்பு செய்து வர்ணம் பூசும் பணிகள் அமைச்சரின் உத்தரவுப்படி மழைக்காலத்திற்கு முன் முடிக்க போர்க்கால அடைப்படையில் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இப்பணிகளின் தரம் மற்றும் செய்யப்பட்டுவரும் வேலைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் மாதந்தோறும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க மேற்பார்வை குழுவும் அமைத்து சமத்துவபுர மராமத்து பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கடந்தஅதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளாமல் கிடந்த சமத்துவபுர பகுதி அமைச்சரிடம் மனு கொடுத்து இரண்டே மாதத்தில் மீண்டும் புத்துயிர்பெற துவங்கியதை அடுத்து அப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர்கள் மிகுந்த மகிழ்சியடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசுக்கும், தங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிதி வழங்கியதுடன், பராமரிப்பு பணிகளை நேரடியாக பார்வையிட்டு தரமுடன் விரைந்து முடிக்க மேற்பார்வை குழு அமைத்த கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.



Tags : Samathuvapuram ,Sempatti , Nilakottai: Renovation works of 100 houses, road, school building near Sempatti at Rs.1.62 crore are underway.
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது