நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை மஞ்சளாறு அணையில் இருந்து 100 நாட்களாக தொடர்ந்து உபரிநீர் திறப்பு

*விவசாயிகள் மகிழ்ச்சி

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் தொடர்மழை காரணமாக 100நாட்களுக்கு மேல் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.தேவதானப்பட்டிக்கு வடக்கே மேற்கு தொடர்ச்சிமலை கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணைக்கு தலையாறு, மூலையாறு, வரட்டாறு, மஞ்சளாறு ஆகிய நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது.

அணையின் மொத்த உயரம் 57 அடி, அணையின் மொத்த கொள்ளளவு 487.35மி.கன அடி, மொத்த பாசன பரப்பு 5259 ஏக்கர், இதில் பழைய ஆயக்கட்டு பாசனம் 3386 ஏக்கர், புதிய ஆயக்கட்டு பாசனம் (வலது பிராதனக் கால்வாய்) 1873 ஏக்கர், தேனி மாவட்டத்தில் 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 2111 ஏக்கர் ஆகும். ஆண்டு தோறும் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக அக்டோபர் 15ம் தேதி அணை திறப்பது வழக்கம். நடப்பாண்டில் தொடக்கத்தில் இருந்தே நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் கடந்த ஜூலை 31ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது.

அணையில் பாதுகாப்பு கருதி 55 அடி உயரம் நீர் கொள்ளளவை வைத்துக்கொண்டு அணைக்கு வரும் நீரை அன்று இரவு 8 மணிக்கு உபரி நீராக வெளியேற்றப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து தற்போது வரை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர் நீர்வரத்து ஏற்பட்டு, அணைக்கு வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்.15ம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கலெக்டர் முரளீதரன் அணையை திறந்து வைத்தார். பாசனத்திற்கு அணை திறப்பு, உபரி நீர் வெளியேற்றம் ஆகியவற்றால் ஆயக்கட்டு பகுதிகளுக்கு போதிய நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. இதனால் நடப்பாண்டில் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை. அந்தந்த பகுதிக்கு ஏற்றார் போல் பயிர் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மஞ்சளாறு அணையில் உபரி நீர் தொடர்ந்து 100 நாட்களை கடந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் மஞ்சளாறு அணை ஆயக்கட்டு பாசனப்பரப்பு விவாசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: