தமிழ்நாட்டில் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் அறிக்கை: வடகிழக்கு பருவமழைத் துவங்குவதற்கு முன்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26-09-2022 அன்று அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்கள்.

மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலர் அவர்கள் 13-09-2022 அன்று அனைத்து துறை அலுவலர்கள், முப்படைகளின் உயர் அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 1-10-2022 முதல் 13-11-2022 வரை 310 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 16 விழுக்காடு கூடுதல் ஆகும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் 9-11-2022 அன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தனது அறிவிக்கையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்றும் இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் 7-11-2022 அன்று மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களை காணொலி மூலம் தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.

11-11-2022 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 250 மி.மீ. சராசரி மழை பதிவானதோடு, சீர்காழியில் 436 மி.மீ., கொள்ளிடம் பகுதியில் 317 மி.மீ., செம்பனார் கோயிலில் 242 மி.மீ. அதி கனமழையும், கடலூர் மாவட்டத்தில் புவனகிரியில் 206 மி.மீ., சிதம்பரம் பகுதியில் 308 மி.மீ. அதி கனமழை பதிவானது. மேலும், தமிழ்நாட்டில் கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 மழைமானி நிலையங்களில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் 108 மழைமானி நிலையங்களில் கனமழையும் பதிவானது. தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12-11-2022 அன்று தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த அறிவுரைகள் வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில் பின்வரும் முனனெச்சரிச்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

* முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

* மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவின் பேரில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத் துறை அமைச்சர் திரு.எஸ். ரகுபதி அவர்களும், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்களும், மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி அவர்களும் மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

* அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்ட இராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்களும், கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டன.  ஆக மொத்தம் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும் முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்டன.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

* பொது மக்களது புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்கியது.

* கனமழையின் காரணமாகவும், அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விட வாய்ப்புள்ள காரணத்தாலும், ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

* மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், தேனி, திருவள்ளூர், சேலம், இராணிப்பேட்டை மாவட்டங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும் 18,744 குடும்பங்களைச் சார்ந்த 52,751 நபர்கள் 99 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

* மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில், சுமார் 45,826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. வயல்வெளியில் தேங்கியுள்ள மழை நீர் தற்போது வடிந்து வரும் நிலையில், பயிர் சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

* மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளான பொது மக்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (14-11-2022) கன மழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளான மயிலாடுதுறை மற்றும் கடலூர்  மாவட்டங்களில்  நேரடியாக ஆய்வு மேற்கொண்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு ஆணையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 13-11-2022 நாளிட்ட அறிவிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 16-11-2022 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (14-11-2022) ஆய்வு மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையினை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளளுமாறு அறிவுரை வழங்கினார்கள்.

Related Stories: