×

மூணாறில் மூன்று தலைமுறையினரை சங்கமித்த அரசுப்பள்ளி தள்ளாடும் வயதிலும் பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள்

*அடையாளம் கண்டு அன்பை பரிமாறினர்

*பசுமை மாறா நினைவுகளுடன் ‘செல்பி’

மூணாறு : கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று தலைமுறையை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1955ம் ஆண்டு காலகட்டத்தில் படித்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கெடுத்தனர். முன்னாள் மாணவரும், முன்னாள் தமிழக டிஜிபியான வால்டர் தேவாரம் துவக்கி வைத்தார். ஆசிரியர் சந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் வால்டர் தேவாரம் பேசுகையில், ‘‘1968ம் ஆண்டு காலகட்டத்தில் மூணாறு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். என்னுடைய அப்பா கண்ணன் தேவன் கம்பெனியில் ரைட்டராக பணியாற்றி வந்தார். அன்றைய காலகட்டத்தில் பல கிலோமீட்டர் கடந்து பள்ளிக்கு வருவேன். அந்த காலத்தில் சக நண்பர்களுடன் தேயிலை காடுகள் வழியாக நடந்து பள்ளிக்கு வருவேன். இனி வரும் தலைமுறைகளில் எஸ்டேட் பகுதிகளில் இருந்து டாகடர், கலெக்டர், போலீஸ் துறைகளில் உயர் பதவிகளில் மாணவ, மாணவிகள் வர வேண்டும். எனக்கு நண்பர்களுடன் நேஷனல் மீட் இருந்த போதிலும், மூணாறு அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் சங்கமத்தில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.’’ எனக் கூறினார்.

இதில் முன்னாள் எம்பி தம்பான் தோமஸ், எம்.ஜெ.பாபு, சன்னி அரக்கல், முன்னாள் தேவிகுளம் எம்எல்ஏ ஏ.கே.மணி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பவ்யா, லிஜி ஐசக் ஆகியோர் பேசினர். இந்நிகழ்சியில் முன்னாள் ஆசிரியர்கள் கவுரவிக்கபட்டனர். சங்கமத்திற்கு வந்த அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. தள்ளாடும் வயதிலும் துள்ளி விளையாடிய மைதானத்தில் கம்பை ஊன்றி கொண்டு சங்கமத்திற்கு வந்தவர்களை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அக்கால அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டது இன்றைய மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. அரசு பள்ளி மைதானத்தில் இப்படி ஒரு சங்கமம் நடப்பது இதுவே முதன் முறை என்பதால் பலரும் தங்கள் நண்பர்களை கண்ட சந்தோஷத்தில் கட்டிபிடித்து அன்பை பரிமாறி கொண்டனர். மேலும் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து செல்பி மற்றும் குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

Tags : Munnar , Munnar: A gathering of teachers and students of three generations was held in Government Higher Secondary School, Munnar, Idukki District, Kerala.
× RELATED மனநலம் குன்றிய சிறுமி பலாத்காரம் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை