கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 11,807 ஏக்கரில் முதற்போக நெல் சாகுபடி நிறைவு

* 22 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மகசூல்  

* தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

கம்பம் : கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் வேளாண்துறை மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது.

தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன.

இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம்மெட்டு பகுதி, வருசநாடு, மேகமலை போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் விவசாயிகளின் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் படுஜோராக நடந்து வருகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கூடலூர் தொடங்கி வீரபாண்டி வரை மொத்தம் 14 ஆயிரத்து 700 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த வருடம் ஜூன் முதல் தேதி தமிழக அரசு பெரியாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு விவசாயத்துக்காக தண்ணீர் திறந்து விட்டது. தென் மேற்கு பருவமழையாலும்,குறிப்பிட்ட நேரத்தில் பெரியாறு அணையில் நீர் திறந்து விட்டதாலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் மொத்தம் உள்ள 11807 ஏக்கர் பரப்பளவில் நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது.இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போகம் பயிரிட்ட நெல் அறுவடையாகி நிறைவு பெற்றதுள்ளது. இதனால் முதல் போக சாகுபடி அறுவடை முடிந்ததும் 2ம் கட்ட சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

தென்னகத்து காஷ்மீர் என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்ட கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் சின்னமனூர் வரை உள்ள 11,807 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் முதற்கட்ட சாகுபடி நிறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மபெரியாறு அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் 4 மாதங்கள் தொடர்ந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்டம் முழுவதும் பசுமையாக்கியது. குறிப்பாக தமிழகத்தின் 2வது நெற்களஞ்சியம் என போற்றப்படும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முதற்கட்டமாக அறுவடையை முடித்து இரண்டாம் கட்ட சாகுபடிக்கு விவசாயிகளை தயார் நிலையில் வைத்துள்ளது. இப்பகுதியில் விளைவிக்ககூடிய நெல்களை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

குறிப்பாக அரிசி இப்பகுதியில் விளையக்கூடிய ஐ.ஆர்.20.விஜய் , எம்.ஜி.ஆர் ரக நெல்களை காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது இரண்டாம் கட்ட சாகுபடிக்கு தயாராகி உள்ள விவசாயிகள் பெரியாறு அணையில் இன்றைய நிலவரப்படி 137 அடியை எட்டி விட்டது. ரூல்கர்வ் முறைப்படி இந்த மாதம் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்தால் 142 அடியாக உயர வாய்ப்புள்ளது. (அணையின் மொத்த கொள்ளளவு 152 அடி) அணைக்கு நீரின் வரத்து 1,109 கனஅடியாகவும், அதிலிருந்து தமிழகத்துக்கு 511 கனஅடி நீர் திறந்து விடப்படுவதால் 2ம் கட்ட சாகுபடியும் அமோகமாக வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க கூறுகின்றனர். அதே போல் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க செய்த தமிழக அரசை விவசாயிகள் மனதார பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கம்பம் பள்ளதாக்கு பகுதியில் முதற்கட்ட சாகுபடி மிக அருமையாக விளைச்சலை தந்துள்ளது.இப்பகுதியில் விளையக்கூடிய நெற்களை காங்கேயம் பகுதியிலிருந்து வியாபாரிகள் நேரிடையாக வந்து நல்ல விலைக்கு வாங்கி செல்கின்றனர். இது தவிர தமிழக அரசு சார்பில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரீப் மார்க்கெட்டிங் பருவம் 2022-23ன் சன்ன ரக நெல் விலை கிலோவுக்கு 21.60 ரூபாயாகவும்,மோட்ட ரக நெல்லுக்கு 21.15 ரூபாயாகவும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. ஒரு மூட்டைக்கு 40 கிலோ நெல்லுக்கு 864 மற்றும் 846 ரூபாய்க்கு 17 சதவிகித ஈரப்பதத்துடன் வாங்கப்படுகிறது.

ஏக்கருக்கு 40 முதல் 42 மூட்டை வீதம் நெல் கிடைப்பதால் கம்பம் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய 11,807 ஏக்கர் பரப்பளவில் கிட்டதட்ட 22 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விளைகிறது. தக்க சமயத்தில் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்ததால் இந்த முறை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கின்றேம்,’’ என்றனர்.

Related Stories: