விருதுநகர் - அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் - அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் அரசு பேருந்தில் இன்று கல்லூரி செல்வதற்காக வெள்ளையாபுரத்தை சேர்ந்த மாதேஷ்வரன் என்ற மாணவர் படிக்கெட்டில் பயணம் செய்துள்ளார். பாலவநத்தம் அருகே வளைவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, மாணவர் மாதேஷ், கை தவறி பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் பின்புறம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் மூலம் மாணவனின் சடலத்தை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவர்கள், மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. அரசு பேருந்துகளை, பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிகமாக இயக்கப்பட வேண்டும் என மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாணவன் உயிரிழந்த சம்பவம், ஊர் மக்கள் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: