×

சம்பா பயிர்காப்பீட்டுக்கான கால அவகாசத்தை 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சம்பா பயிர்காப்பீட்டுக்கான கால அவகாசத்தை 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுளளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் சம்பா நடவு மற்றும் விதைப்புப் பணிகள் இப்போது தான் தீவிரம் அடைந்து வருகின்றன. பருவமழை காரணமாக  பல இடங்களில் நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சம்பா நடவுப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே காப்பீட்டுக்காக  அவகாசத்தை முடித்துக் கொள்வது சமவாய்ப்பு ஆகாது.

காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் 40 சதவீதத்துக்கும் குறைவான விவசாயிகள் மட்டும் தான் சம்பா பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். கால அவகாசம் நீட்டிக்கப்படாவிட்டால் 60 சதவீதத்துக்கும் கூடுதலான விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு மறுக்கப்படும். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். வடகிழக்கு பருவமழையால் விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை இரு வாரங்களுக்கு, அதாவது நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Ramadas ,Bamaka , Samba Crop Insurance, Term, Ramadoss
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...