×

சர்வதேச விவகாரங்கள் பற்றி ஜி-20 தலைவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்படும்: இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகளாவிய வளர்ச்சி, உணவு, எரிசக்தி பாதுகாப்பு உள்பட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி ஜி-20 தலைவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டு பாலி நகருக்கு செல்கிறார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு அவரது 3 நாள் பயணத்திற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நான் நேரில் சந்தித்து பேச உள்ளேன்.

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறுஆய்வு செய்யப்படும். இதன்பின், பாலியில் நாளை நடைபெற கூடிய வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களிடையே உரையாற்ற இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார். ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதனை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளார். நமது நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என பிரதமர் மோடி பாலிக்கு புறப்படும் முன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

Tags : G-20 ,PM Modi ,Indonesia , International affairs to be discussed extensively with G-20 leaders: PM Modi's speech as he leaves for Indonesia
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!