×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு!: 316 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய 3600 பக்க விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீஸ் 316 பேரிடம் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கை உதகை நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பல்வேறு சாட்சிகளிடம் கோவையில் உள்ள பிஆர்எஸ் அலுவலகத்தில் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி  வந்தனர்.

இதற்கிடையே, இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனால், தனிப்படை போலீசார் இதுவரை சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிபதி முருகனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்த ஏதுவாக இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் சிபிசிஐடி போலீசார், நீலகிரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து பெற்று சென்றனர்.

ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், 316 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 316 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய 3600 பக்க விசாரணை அறிக்கை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. உதகை நீதிமன்றத்தில் 3600 பக்க விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தது. கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. விசாரணையின் போது சசிகலாவிடம் 280 கேள்விகள் கேட்கப்பட்டன; சசிகலா அளித்த பதில்கள் 30 பக்கங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kondanadu , Kodanadu case, 3600 page report, Uthakai Court
× RELATED கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக...