×

மூணாறு மண் சரிவில் சிக்கிய சுற்றுலாப்பயணி உடல் மீட்பு: உருக்குலைந்த வாகனமும் கண்டெடுப்பு

மூணாறு: மூணாறு மலைச்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போன சுற்றுலாப் பயணியின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக, இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே மூணாறு - வட்டவடை சாலையில் குண்டளை அணைக்கட்டு புதுக்கடி  அருகே மலைச்சாலையில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது, இந்த சாலையில் சென்ற சுற்றுலாப்பயணிகள் வாகனம் ஒன்று மண் சரிவில் சிக்கிக் கொண்டது. இதனால், பதற்றமடைந்த சுற்றுலாப் பயணிகள் 11 பேர் அலறியபடி வாகனத்தில் இருந்து வெளியேறி உயிர் தப்பினர்.

 மீண்டும் ஏற்பட்ட மண் சரிவில் வாகனம் அடித்து செல்லப்பட்டது. இதில், வாகனத்தை ஓட்டிய ரூபேஷ் என்பவர் உள்ளே சிக்கிக் கொண்டார். தகவலறிந்து மூணாறு மற்றும் மாட்டுப்பெட்டியில் இருந்து போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக ரூபேஷை தேடும் பணி மாலையில் நிறுத்தப்பட்டது. அதன்பின் நேற்று காலை மீண்டும் தொடங்கியது. மண் சரிவில் 750 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்ட வாகனம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது. வாகனம் கிடந்த இடத்திற்கு அருகே ரூபேஷ் சடலமும் மண்ணில் புதைந்து கிடந்தது. போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் அவரது உடலை மீட்டு அடிமாலி அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


Tags : Munnar , Munnar Landslide, Tourist, Body Recovery, Wrecked Vehicle, Discovery
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...