×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 750 கன அடியாக குறைப்பு

பல்லாவரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 750 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது. இதனால் ஏரி முழுவதும் தண்ணீர் நிறைந்து கடல் போல் காட்சியளிக்கிறது.

தொடர் நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் 1000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்தநிலையில், தற்போது மழை சற்று குறைய தொடங்கியதை அடுத்து ஏரிக்கு வரும் நீர்வரத்தும் வழக்கமான அளவை விட சற்று குறையத் தொடங்கியது.

நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்ட உயரம் 20.50 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2800 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. தற்போது, நீர் வரத்து குறைந்ததையடுத்து ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 750 கன அடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து குறையும் பட்சத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது மேலும் படிப்படியாக குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் கோடை கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக, ஏரியின் நீர்மட்டத்தை 20 அடி என்ற அளவில் தக்க வைத்து, அதிகாரிகள் தொடர்ந்து ஏரியை கண்காணித்து வருகின்றனர்.


Tags : Chembarambakkam lake , Chembarambakkam Lake, surplus water, discharge, 750 cubic feet, reduction
× RELATED துண்டு துண்டாக வெட்டி காவலாளி கொலை;...