ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை முருகன் உள்பட 4 பேர் திருச்சி முகாமில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருச்சி: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 4 பேர், திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

அதே வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவர்களையும் விடுதலை செய்து கடந்த 11ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதனை தொடர்ந்து சிறை நடைமுறைகள் முடிவடைந்ததையடுத்து 6 பேரும் நேற்று முன்தினம் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதில் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை பிரஜைகள் என்பதால் அவர்கள் 4 பேரையும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் அடைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோர் 11.15 மணி அளவிலும், ராபர்ட்ஸ் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் இருந்து 11.30 மணி அளவிலும் அழைத்து வரப்பட்டனர்.

திருச்சி மத்திய சிறையில் அவர்களது வருகையை வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம் பொறுப்பு அதிகாரியும், சப் கலெக்டருமான வேலுமணி முறைப்படி பதிவு செய்தார். பின்னர் 4 பேரும் சிறப்பு முகாமில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி அந்த அறைகளின் ஜன்னல்கள் அட்டைகளை வைத்து அடைக்கப்பட்டன. முன்னதாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் சுந்தரமூர்த்தி, சுரேஷ்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கியூ பிரிவு அதிகாரி கூறியதாவது:

முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை ஆனாலும் அவர்கள் வெளிநாட்டினர் (இலங்கை) என்பதால் முகாம் சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டுக்கு செல்வதும், வெளிநாட்டினர் என பதிவு செய்து இந்தியாவில் தங்கி இருப்பதும், இலங்கை தமிழர் நல் வாழ்வு முகாமுக்கு செல்வதும் அவர்களது விருப்பம். உள்துறை அனுமதி கிடைத்ததும் அவர்கள் இங்கு இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

Related Stories: