×

திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை தலைமை செயலாளர் ஆய்வு

திருவொற்றியூர்: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருவொற்றியூர், மாதவரம் போன்ற தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இவ்வாறு தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மின் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மேலும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தற்காலிக கால்வாய்களை வெட்டி குடியிருப்புகளை சுற்றி இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்துகின்றனர்.  

இந்த பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். மாதவரம் ரெட்டேரி அருகே அண்ணாநகர், கணபதி நகர் இளங்கோ நகர் ஆகிய பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த அவர், அங்கு நடைபெறும் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து வடக்கு மண்டல வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.  அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் மாநகராட்சி நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அவருடன் மழைக்கால சிறப்பு அதிகாரி ஸ்ரீதர், கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.




Tags : Chief Secretary ,Thiruvottiyur ,Madhavaram , Chief Secretary inspects rainwater removal works in Thiruvottiyur and Madhavaram areas
× RELATED குஜராத் மாஜி தலைமை செயலாளருக்கு லோக்பால் உறுப்பினர் பதவி