×

திருப்பதியில் உள்ளூர் போட்டோகிராபர்களின்கேமராக்களை பறிமுதல் செய்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்: பக்தர்களுக்கு இடையூறு செய்ததால் அதிரடி

திருமலை: திருப்பதி கோயில் எதிரே பக்தர்களுக்கு இடையூறாக புகைப்படம் எடுத்த உள்ளூர்  புகைப்பட கலைஞர்களின் கேமராக்களை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பறித்து  உண்டியலில் செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலுக்கு வந்ததற்கு நினைவாக தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து செல்வது வழக்கம். ஒரு சிலர் அங்கு உள்ள புகைப்பட கலைஞர்கள் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு போட்டோ பிரேம் போட்டு கொண்டு செல்வது வழக்கம்.

இதற்காக உள்ளூர் புகைப்பட கலைஞர்கள் பலர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்காக அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், லைசன்ஸ் இல்லாமல் அதிகளவில் புகைப்பட கலைஞர்கள் பக்தர்களுக்கு இடையூறாக செயல்பட்டு புகைப்படங்கள் எடுக்க வலியுறுத்தி தொல்லை கொடுத்து வருவதாக பக்தர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனால் கோயில் முன்பு அனுமதியில்லாமல் இருந்த புகைப்பட கலைஞர்களிடம் இருந்த கேமராக்களை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த கேமராக்களை கோயில் உண்டியலில் செலுத்தினர்.  

இதனால், இந்த கேமராக்கள் அனைத்தும் தேவஸ்தானம் சார்பில் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு  அந்த தொகையை தேவஸ்தான கணக்கில் செலுத்தப்பட உள்ளது. அனுமதியின்றி கேமரா வைத்து கொண்டு போட்டோ எடுப்பதாக பக்தர்களுக்கு தொல்லை கொடுத்தால்,  இதேபோன்று தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Tags : Tirupati , Tirupati, photographer, camera, confiscation bill, officials
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...