×

கேரளாவில் மீண்டும் துவங்கியது விஷமப் பிரசாரம் பெரியாறு அணை அவதூறு குறும்படம் வெளியீடு: உடனே தடை செய்ய வலியுறுத்தல்

கூடலூர்: பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் வகையில், ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள ‘பெரியாறு - தி பிளீடிங் ரிவர்’ குறும்படத்தையும், அந்த அமைப்பையும் தடை செய்யக்கோரி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கண்டன போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். கேரளாவில் வழக்கறிஞர் ரசல் ஜோய் என்பவர் ‘சேவ் கேரளா பிரிகேட்’ என்ற அமைப்பை தொடங்கி, பெரியாறு அணைக்கு எதிராக விஷமப் பிரசாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்.

‘அணைக்கு 142 அடி தண்ணீரை தாங்கக்கூடிய சக்தி இல்லை. அணை உடைந்தால் கேரளாவில் ஐந்து மாவட்டங்கள் அழியும், 50 லட்சம் மக்கள் இறப்பார்கள்’ என கேரளா முழுவதும் இந்த அமைப்பு பொய் பிரசாரம் செய்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகிறது.  கடந்த ஜூலை மாதம் இந்த அமைப்பினர் பெரியாறு அணை குறித்து ஆவணப்படம் எடுக்க சமூக வலைத்தளங்களின் மூலம் கேரள மக்களிடம் நன்கொடை பெற்றனர்.

இந்நிலையில் ‘பெரியாறு - தி பிளீடிங் ரிவர்’ என்ற பெயரில் 17  நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை இந்த அமைப்பினர் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.  இந்த அமைப்பினரின் விஷமத்தனத்தை கண்டித்து இப்பகுதி முழுவதும், ‘பெரியாறு’ குறும்படத்தையும், அந்த அமைப்பையும் தடைசெய்யக்கோரி ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கண்டன போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்க தலைவர் எஸ்ஆர்.தேவர் கூறுகையில், ‘‘ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான பெரியாறு அணை குறித்து கேரள மக்களிடையே பொய்யுரை பரப்பும் சேவ் கேரளா பிரிகேட்  அமைப்பையும், அதன் தலைவரான ரசல் ஜோயையும் வன்மையாக கண்டிக்கிறோம்.  

இரு மாநில மக்களின் நல்லுறவை கெடுக்கின்ற வகையில், தேசப்பிரிவினையை தூண்டும் வகையில் செயல்படும் சேவ் கேரளா பிரிகேட் அமைப்பு  வெளியிட்டுள்ள ‘பெரியாறு’ குறும்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். பிரிவினையை தூண்டும் ரசல் ஜோய் உள்ளிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Periyar dam ,kerala , Poison propaganda started again in Kerala, Periyar dam, release of defamatory short film,
× RELATED கடும் வெயிலின் காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் சரிவு