×

தைவானை முற்றுகையிட்ட 36 சீன போர் விமானங்கள்: டிரோன்கள் மூலம் உளவு

தைபே: சீனாவின் 36 போர் விமானங்கள் தைவானை சுற்றி வருகின்றன. மேலும், டிரோன்களும் உளவு பார்ப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவும் தைவானும் கடந்த 1949ம் ஆண்டு போருக்கு பின்னர் பிரிந்தன. ஆனாலும், தைவானை தனது பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், அதனை தனி நாடாக அங்கீகரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவான் மீது சீனா போர் தொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த ஆகஸ்ட்டில் தைவான் வந்து சென்ற பிறகு, அமெரிக்க எம்பி.க்கள் குழு அடிக்கடி தைவான் வந்து செல்கின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது. தைவான் ஜலசந்தி அருகே போர் விமானங்களை அனுப்பி தைவானை அச்சுறுத்தியது. பதிலடி கொடுக்கும் வகையில், தைவானின் விமானப்படை போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், சீனாவின் 36 போர் விமானங்கள் தைவான் ஜலசந்தி பகுதியில் கடந்த சனிக்கிழமை பறந்தன. இவற்றில் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் விமானங்களும் இடம் பெற்றன. இது, தவிர 3 சீன டிரோன்களும் சுற்றி திரிந்தன என்று தைவான் தெரிவித்துள்ளது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.


Tags : Taiwan , Taiwan, blockade, 36 Chinese fighter jets, drones, spying
× RELATED மன்னிப்பு கேட்டார் தைவான் அமைச்சர்