×

ஐசிசி உலக கோப்பை டி20: 2வது முறையாக இங்கிலாந்து சாம்பியன்: பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல்

மெல்போர்ன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பைனலில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து, 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8வது உலக கோப்பை டி20 தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. மெல்போர்ன் கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. ரிஸ்வான், கேப்டன் பாபர் இருவரும் பாக். இன்னிங்சை தொடங்கினர்.

ரிஸ்வான் 15 ரன் எடுத்து சாம் கரன் வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 8 ரன் எடுத்து ரஷித் சுழலில் ஸ்டோக்ஸ் வசம் பிடிபட்டார். பாகிஸ்தான் 7.1 ஓவரில் 45 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், பாபர் - ஷான் மசூத் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தனர். பாபர் 32 ரன் (28 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ரஷித் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, அடுத்து வந்த இப்திகார் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் பிடிபட்டார்.

ஓரளவு தாக்குப்பிடித்த ஷான் மசூத் 38 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஷதாப் கான் 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். நவாஸ் 5, வாசிம் 4 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. ஷாகீன் அப்ரிடி 5 ரன், ஹரிஸ் ராவுப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 4 ஓவரில் 12 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். அடில் ரஷித், கிறிஸ் ஜார்டன் தலா 2, ஸ்டோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. கேப்டன் பட்லர், ஹேல்ஸ் இணைந்து துரத்தலை தொடங்கினர். ஹேல்ஸ் 1 ரன் மட்டுமே எடுத்து அப்ரிடி வேகத்தில் கிளீன் போல்டாக, இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஃபில் சால்ட் 10 ரன் எடுத்து ராவுப் பந்துவீச்சில் இப்திகார் வசம் பிடிபட்டார். பட்லர் 26 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, ஹாரி புரூக் 20 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இங்கிலாந்து 12.3 ஓவரில் 84 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஸ்டோக்ஸ் - மொயீன் ஜோடி உறுதியுடன் போராடியது.

ஷாகீன் அப்ரிடி தனது 3வது ஓவரின் முதல் பந்தை வீசிய பிறகு, காயம் காரணமாக பந்துவீச்சை தொடர முடியாமல் வெளியேறியது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. அந்த ஓவரின் எஞ்சிய 5 பந்துகளை இப்திகார் அகமது வீசிய நிலையில், 5வது மற்றும் 6வது பந்தை பவுண்டரி, சிக்சராகப் பறக்கவிட்டார் ஸ்டோக்ஸ். அடுத்து முகமது வாசிம் வீசிய 17வது ஓவரில் மொயீன் அலி 3 பவுண்டரிகளை விளாச, ஆட்டம் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் வந்தது. மொயீன் 19 ரன் (12 பந்து, 3 பவுண்டரி) விளாசி வாசிம் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார்.

இங்கிலாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து வென்று 2வது முறையாக டி20 உலக கோப்பையை முத்தமிட்டது. ஸ்டோக்ஸ் 52 ரன் (49 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), லிவிங்ஸ்டன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ராவுப் 2, அப்ரிடி, ஷதாப், வாசிம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நடப்பு தொடரில் இருந்த 1992 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் முடிவுகளின் அபூர்வ ஒற்றுமைக்கு முத்தாய்ப்பாக, பைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற பாகிஸ்தானின் கனவு கலைந்தது. பந்துவீச்சில் அசத்திய சாம் கரன் (4-0-12-3) ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.



Tags : ICC World Cup T20 ,England ,Pakistan , ICC World Cup T20, 2nd time, England champions
× RELATED சில்லி பாயின்ட்…