×

போதை பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை கஞ்சா, போதை பவுடர் விற்ற 1,088 பேர் கைது: சென்னை போலீசாரின் அதிரடியால் மாநகரில் குற்றங்கள் குறைந்தது

சென்னை: போதை பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையால், கடந்த 10 மாதங்களில் கஞ்சா, மெத்தாம்பிட்டமைன் போதை பவுடர் உள்ளிட்டவற்றை விற்றதாக 1,088 பேரை சென்னை போலீசார் கைது ெசய்துள்ளனர். இதனால் மாநகரில் வெகுவாக குற்றங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கைகளில் சர்வ சாதாரணமாக கிடைத்தது.

போதை பொருள் பயன்பாடு காரணமாக தன்னிலை மறக்கும் இளஞைர்களால், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் கொலை, ஆள்கடத்தல், திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்தது. இதனால், போதை பொருள் நுகர்வால் அவர்களில் பலர் கல்வி, வேலை என வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லாமல் குற்றவாளிகளாக இந்த சமூகத்தில் சுற்றி திரிவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது.

 இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களை தடுக்க பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குற்றங்களுக்கு தூண்டுகோலாக போதை பொருட்கள் இருக்கிறது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மாநாட்டில், ‘‘தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யவும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருட்களை தடுக்கவும், அவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக காவல்துறை உயர் அதிகாரிகள் போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாநகர காவல்துறை கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்ற பிறகு போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக ‘போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற திட்டத்தை அதிரடியாக கொண்டு வந்தார்.  அதன்படி, போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க 2 கூடுதல் கமிஷனர்கள், 4 இணை கமிஷனர்கள் நேரடி மேற்பார்வையில் 12 காவல் மாவட்டத்தில் உள்ள துணை கமிஷனர்கள் தனித்தனியாக போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கினர்.

போலீசாரின் இந்த தொடர் நடவடிக்கையால் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வர காரணமாக இருந்த மொத்த வியாபாரிகளான ஆலந்தூரை சேர்ந்த நந்தகுமார்(23), கன்னியாகுமரியை சேர்ந்த அருண் பாண்டியன்(30) ஆகியோரை பல நாட்கள் ரகசியமாக கண்காணித்து கைது செய்தனர்.  மேலும் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா அதிகளவில் கடத்தப்படுவதை தமிழக எல்லையிலேயே போலீசார் தடுத்தனர். அதோடு, வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் போதை பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்து வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒனூரா அகஸ்டின்(29) என்பவரையும் கைது செய்தனர். அவனிடம் இருந்து 110 கிராம் மெத்தாம்பிட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தான்சானியாவை சேர்ந்த பெண் பிரிஸ்கா ஹம்சா(33) என்பவரையும் கைது செய்து 10 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல், ெசன்னையின் வெளிபகுதிகளில் உள்ள குடோன்களில் அடிக்கடி ரெய்ட் செய்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சா வியாபாரிகள், போதை பொருள் ஆசாமிகள் சென்னைக்குள் வருவதை நுண்ணறிவு பிரிவு கண்காணித்து பிடித்து சிறையில் தள்ளியது. சென்னையின் முக்கிய கஞ்சா வியாபாரிகள் தென்சென்னை, வடசென்னை என்ற பாகுபாடு இல்லாமலும் ஆண், பெண் என்ற பேதம் இல்லாமலும் கைது செய்யப்பட்டனர். ஒரு குடும்பத்தில் 5க்கும் மேற்பட்டோரை போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். போலீசாரின் கடுமையான நடவடிக்கையால் கஞ்சா மற்றும் போதை பொருட்களை சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆன்லைன் ஆர்டர்...:  கஞ்சா வியாபாரிகள் போலீசாருக்கு தெரியாமல் ‘ஆன்லைன்’ மூலம் மருந்து பொருட்கள் கொள்முதல் செய்வது போல் வெளிமாநில வியாபாரிகள் மூலம் கஞ்சா, போதை மத்திரைகள், போதை ஸ்டாம், மெத்தாம்பிட்டமைன், கொகைன், போதை டானிக், கஞ்சா ஆயிலை கொள்முதல் செய்து, தங்களது வாடிக்கையார்களுக்கு வாட்ஸ் அப் குழு மூலம் ரகசியமாக விற்பனை செய்து வந்தனர். அதையும் மாநகர போலீசார் 12 மாநில இணையதள குற்ற குழுக்களை அமைத்து, கொரியர் சேவை நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வந்த போதை பொருட்களை மாநகர காவல்துறை முறியடித்துள்ளனர்.

மொத்த கஞ்சா வியாபாரிகளுக்கு குறி: சில்லறையில் கஞ்சா விற்பவர்களை கைது செய்த போலீசாரின் பார்வை அடுத்ததாக, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் நபர்களின் பக்கம் திரும்பியது. அதன்படி 4 மாத தொடர் கண்காணிப்பிற்கு பிறகு புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மெத்தாம் பிட்டமைன் மருந்து மொத்த விற்பனையாளரான ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் ஐத்தா(எ)ஓங்கோல் ரமேஷ் என்பரை கைது செய்தனர். இவரின் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில போதை பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டு பிடித்து சீல் வைக்கப்பட்டது. மேலும், அதற்கான மூலப்பொருட்கள், எபிட்ரின் மற்றும் மருத்துவ கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாணவர்கள் இடையே விழிப்புணர்வு:
முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் மாணவர்கள் மத்தியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த “எனக்கு வேண்டாம்” என்ற தலைப்பில், மாநிலத்திலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  முன்னதாக, போதைப்பொருட்களை  தவறாகப் பயன்படுத்துவது மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச  தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் நடைபெற்ற பேரணியில் கமிஷனர் சங்கர்  ஜிவால் கலந்து கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் கூடும்  இடங்களில் விழிப்புணர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதைதொடர்ந்து, சென்னை மாநகர காவல்துறை சார்பில் 828 பள்ளி, கல்லூரிகளில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 3 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், 1,794 பள்ளி, கல்லூரிகளிலும் கல்வித்துறையுடன் இணைந்து கூருணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் 3.79 லட்ச மாணவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் 1,309 இடங்களை தேர்வு செய்து போதை பொருட்களுக்கு எதிராக மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 2.82 தனி நபர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் சிறப்பான நடவடிக்கையால் சென்னையில் தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் கஞ்சா கடத்தல் குறைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பில் வடகிழக்கு மாநிலங்கள்: திரிபுரா மாநிலத்தில் இருந்து ரயில் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தி வருவது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் அதையும் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜார்கண்ட், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், மேற்குவங்கம் உள்பட பல மாநிலங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து வரும் கஞ்சா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது சென்னையில் கஞ்சா வெகுவாக குறைந்துள்ளது.

குண்டர் சட்டம்: மாநகர காவல்துறையில் சிறப்பான நடவடிக்கையால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தாக கடந்த 2021ம் ஆண்டு 463 வழங்குகள் பதிவு செய்யப்பட்டு 17 வியாபாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது ெசய்யப்பட்டனர். 2022ம் ஆண்டு அதாவது இந்த ஆண்டு ஆக்டோபர் வரையில் 10 மாதங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 672 வழக்குகள் மாநகர காவல் துறை சார்பில் புதிவு செய்யப்பட்டு, 1088 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  போதை பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தற்போது சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் சட்டவிரோதமாக கடந்த 6 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட 1,950 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கோர்ட் உத்தரவுப்படி அழிக்கப்பட்டது.
* கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை சட்டவிரோத போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 25 வழக்குகள் பதிவு செய்து, 42,302 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
* 2021ஆம் ஆண்டு 1,460 கிலோ கஞ்சா, 4.02 கிலோ மெத்தாம்பிட்டமைன், எபிட்ரின் மற்றும் 5,949 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
* 2022ம் ஆண்டு 1,557 கிலோ கஞ்சா, 24.60 கிலோ மெத்தாம்பிட்டமைன், எபிட்ரின் பறிமுதல் செய்யப்பட்டது.
* அடுத்த 6 மாதத்தில் சுமார் 700 கிலோ போதை பொருட்கள் அழிக்க மாநகர காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
* 626 வழக்குகளில் தொடர்புடைய 1,429 குற்றவாளிகள் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதில், 476 வழக்குகளில் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* கஞ்சா வியாபாரிகளின் ரூ.20.37 லட்சம் மதிப்புள்ள 760 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், 412 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து ரூ.17.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்கும் நபர்களின் நடவடிக்கையை கண்காணித்தல், விற்பனையை தடுத்தல் மற்றும் கைது நடவடிக்கைகளால் சென்னையில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தினாலும், அதை முற்றிலும் ஒழிக்க சென்னை காவல் துறை அதிரடியில் இறங்கியது. அதாவது போதை பொருள் விற்கும் கும்பலின் அஸ்திவாரமான ஆள் பலத்தை குறைக்க பலரை கைது செய்து சிறையில் தள்ளியது. மேலும், அவர்களின் பணபலத்தை ஒடுக்கும் வகையில், அவர்களின் நூற்றுக்கணக்கான வங்கி கணக்கை முடக்கியது. இதனால், இவர்களால் பண பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. போதை பொருளை வாங்குவது ஏறக்குறைய நின்றுபோது. மேலும், போதை பொருள் விற்பனை மூலம் வாங்கிய சொத்துக்களை முடக்கியதால், அவர்களின் கஞ்சா விற்பனை என்ற முதுகெலும்பு முற்றிலும் உடைக்கப்பட்டுள்ளது.

ரகசியம் காக்கப்படும்
சென்னை மாநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கும் பொதுமக்களின் விபரங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு காவல்துறை சார்பில் வெகுமதிகளும் வழக்கப்படும் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : Chennai police , Serious action against drugs, ganja, drug powder, action of Chennai police,
× RELATED ஜாபர் சாதிக் மீது 26 வழக்குகளா? சென்னை காவல்துறை விளக்கம்