×

விடுதலைக்கு ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி: நளினி பேட்டி

சென்னை: சிறையில் 31 ஆண்டுகள் வாடிய என் விடுதலைக்காக ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக நளினி கூறியுள்ளார்.
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிசந்திரன் ஆகியோரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்நிலையில், சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் நளினி நேற்று கூறியிருப்பதாவது:
ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் சிறையில் இருந்த எங்களின் விடுதலைக்காக ஒத்துழைப்பு அளித்த ஒன்றிய அரசு, தமிழக அரசு மற்றும் தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விடுதலை செய்யப்பட்ட எனது கணவர் முருகனை இன்று சந்திக்க இருக்கிறேன். மேலும், இலங்கை தூதரகம் சென்று பாஸ்போர்ட் பெற்ற பின்னர் கணவர் முருகனுடன் எனது மகள் வசிக்கும் நாட்டிற்கு செல்ல இருக்கிறேன். 31 ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும் எனது மகள் ஹரித்ரா மற்றும் கணவருடன் வாழ்ந்தது போல தான் நினைத்திருந்தேன்.

முருகன் இலங்கை தமிழர் என்ற அடிப்படையில் அவருக்கு விசா கொடுக்க சிக்கல்கள் இருந்தாலும், உலக தமிழர்களின் ஆதரவால் அவை கிடைக்க முயற்சி மேற்கொள்வோம்.  தமிழக அரசு முருகனை எங்களுடைய மகளுடன் சேர்ந்து வாழ உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.

நளினி வழக்கறிஞர் ஆனந்த்  செல்வம் கூறியதாவது:  ஆளுநர் எந்த ஒரு சட்ட முகாந்திரமும் இல்லாமல் இரண்டரை ஆண்டுகள் காலதாமதம் செய்து தமிழக அமைச்சரவை தீர்மானத்தை குடியரசு  தலைவருக்கு அனுப்பினார்.  இவை மாநிலங்களுக்கான அதிகாரம் மற்றும் மக்களுக்கு  அளிக்கப்பட்ட அதிகாரம் மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. அதனைதான்  நீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தற்போது இவர்களை விடுதலை  செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வருக்கு நன்றி
தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த வழக்கில் என்ன மாதிரியான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்பதை அறிந்து செய்து வந்துள்ளார்.
அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும், இந்த வழக்கில் முக்கிய பங்காற்றியவர் நீதிபதி சதாசிவம். எந்த வழக்குகளும் இல்லாத நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என கூறியவர் நீதிபதி சதாசிவம்.அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறுகிறேன்.

எனக்கு தெரியாது
ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி இறந்தது மிகுந்த வருத்தமாக உள்ளது. அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குண்டு வெடிப்பு நடந்த போது  நான் அந்த இடத்தில் இல்லை. இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று எனக்கு உண்மையாகவே தெரியாது.

படிப்பு
சிறையில் இருந்த நேரத்தில் பல தடைகளுக்கிடையே 6 ஆண்டுகள் உயர்கல்வி படித்து முடித்தேன். சிறையில் இருந்தே தையல், ஓவியம், கைவினை பொருட்கள் செய்வது, போன்ற பல சுய தொழில்களை கற்றுக்கொண்டேன்.

பிரியங்கா காந்தியை சந்திக்க தயாராக உள்ளேன். பிரியங்கா காந்தி என்னை சிறையில் சந்தித்த போது ராஜிவ்காந்தியின் இறப்பு தொடர்பாக பல கேள்விகள் அவர் என்னிடம் கேட்டார். அவருக்கு தகுந்த பதிலை அளித்தேன். பிரியங்கா என்னை சந்தித்த போது அழுதார். ராஜிவ்காந்தியின் மரணம் தொடர்பான காயங்கள் மனதளவில் அவருக்கு ஆறாத வடுவாக இருந்ததை உணர்ந்தேன்.

Tags : Tamil Nadu government ,Tamil Nadu , Thanks to Tamil Nadu government and people of Tamil Nadu for cooperation in liberation, Nalini interview
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...