நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் டெல்லியில் பயங்கர பூகம்பம் தாக்கும்?: எந்த நேரத்திலும் நடக்கலாம்

புதுடெல்லி:  நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால், தலைநகர் டெல்லியில் எந்த நேரத்திலும் 7.9 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் ஒரே வாரத்தில் 2வது முறையாக நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 9ம் தேதி 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடு இடிந்து 6 பேர் பலியாகினர்.

நேற்று முன்தினம் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதன் காரணமாக, தலைநகர் டெல்லியிலும் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. இவ்வாறு நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால், இமயமலையை ஒட்டி உள்ள உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிலநடுக்கத்தின் ஆபத்து அதிகளவில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ‘நிலநடுக்க ஆபத்து மைக்ரோசோனேஷன்’ என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கையில், ‘நிலநடுக்க ஆபத்து பட்டியலின்படி டெல்லி மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், யமுனை ஆற்றின் பெரும்பாலான பகுதிகள், வடக்கு டெல்லியின் சில பகுதிகள் மற்றும் தென்மேற்கு டெல்லியின் குறிப்பிட்ட பகுதிகள் மிகவும் ஆபத்து பட்டியலில் உள்ளன. தலைநகர் டெல்லியில் எப்போது வேண்டுமானாலும் 7 முதல் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பேரழிவுகள் ஏற்படலாம். எனவே, தலைநகர் டெல்லியில் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மக்கள் தொகை நெருக்கமுள்ள பகுதிகள் கண்காணித்து அதனை முறைப்படுத்த வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது.

* பொதுவாக ரிக்டர் அளவு 6க்கு மேல் சென்றால் மட்டுமே கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

* தலைநகர் டெல்லியை பொருத்தமட்டில் பாதிக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சாதாரண அதிர்ச்சியைக் கூட தாங்கக் கூடியதாக இல்லை.

* அதே நேரம் மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக இருப்பதால், இதுபோன்று பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம்.

Related Stories: