ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேஷியா பயணம்: உலக தலைவர்களுடன் சந்திப்பு

புதுடெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். உலகின் வளர்ந்த மற்றும் வளரும் முக்கியமான நாடுகளின் கூட்டமைப்பு ஜி20 அமைப்பாகும். இதில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி தீவில் நாளை, நாளை மறுதினமும் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இன்று விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்.

மாநாட்டில் அவர், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய 3 முக்கிய அமர்வுகளில் பங்கேற்று, இதுதொடர்பாக உலக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த மாநாட்டில் உக்ரைன் போர் விவகாரம், பொருளாதாரம் நிலைத்தன்மை அற்ற நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தை ஜி20 நாடுகள் கொண்டுள்ளன. இதனால், உலக பொருளாதார நிலை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி சிறப்பு அழைப்பாளராக ஆன்லைன் வாயிலாக உரையாற்ற உள்ளார்.

மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பில் இரு தரப்பு தடையற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம் பெறும் என தெரிகிறது. இதே போல, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரையும் சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த சந்திப்புகள் உறுதி செய்யப்படவில்லை.

இந்தியா-அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு

கம்போடியா நாட்டின் புனோம் பென்னில் நடக்கும் ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டின் இடையே, ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை நேற்று சந்தித்து பேசினார். இதில் இருதரப்பு உறவு, இந்தோ-பசிபிக் நிலவரம், உக்ரைன் போர், ஜி20 மாநாடு, எரிசக்தி துறை குறித்து இரு தலைவர்கள் பேசியதாக ஜெய்சங்கர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்க உள்ளதை அமெரிக்கா வரவேற்பதாக ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைவர்

ஜி20 அமைப்பின் அடுத்த தலைவராக இந்தியா வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி பதவியேற்க உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகை ஜி20 மாநாட்டில் முக்கியமாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

45 மணி நேரம்; 20 நிகழ்ச்சி

* பிரதமர் மோடி பாலியில் 45 மணி நேரம் தங்குகிறார். இதில், 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

* மாநாட்டின் இடையே மோடி, 10 உலக தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

* இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜே பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓல்ப் ஸ்கோல்ஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Related Stories: