×

மழைநீர் பாதிப்பு, வடிகால் பணிகள் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: சீர்காழி, மயிலாடுதுறை, கடலூரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று பார்வையிடுகிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். கன மழையை எதிர்பார்த்து தான் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஆபத்துக்களும் வருவதற்கு வாய்ப்பே கிடையாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரு.வி.க.நகர் மற்றும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல அலுவலகத்தில், ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொசு வலைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதை ஸ்ட்ரான்ஸ் சாலை சந்திப்பு மேம்பாலத்தில் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் தேங்காமல் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணியின் காரணமாக தேங்கியுள்ள மழை நீரை 200 குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் வெளியேற்றப்படும் பணிகளையும், கொசஸ்தலை வடிநிலப் பகுதி ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் 16 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளில் பல்லவன் சாலை,  டான்பாஸ்கோ பள்ளி அருகே செல்லும் மழைநீர் வடிகால் பணிகளையும்,  பல்லவன் சாலை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் மழை நீர் வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு மழையின் போது அதிக அளவு மழை நீர் தேங்கி பாதிப்புக்கு உள்ளான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 70 அடி சாலையை பார்வையிட்டு, இந்த ஆண்டு மழை நீர்தேக்கமில்லாத அளவிற்கு பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

ஆய்வின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  
மழை பெய்யும் பொழுது நீர் இருந்திருக்கும். அதன் பிறகு மழை  நீர் வடிந்து விடுகிறது. கன மழையை எதிர்பார்த்து தான் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். எந்த ஆபத்துக்களும் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து, மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, சிறப்பான பணியினை செய்து வருகிறார்கள். எதிர்கட்சிகள் தான் விமர்சனம் செய்கிறது. பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். அதுவே எங்களுக்கு போதும்.  இவ்வாறு அவர் கூறினார்.

 இந்நிலையில் தமிழகத்திலேயே 122 ஆண்களுக்கு பிறகு அதிகபட்ச மழையான 44 சென்டிமீட்டர் மழை பொழிவு பெற்றுள்ள சீர்காழி சுற்றுவட்டாரமே நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களும் சேதமடைந்துள்ளன. மேலும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் நெல் உள்ளிட்ட விவசாய பயிர்கள் தண்ணீரில் முழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 சென்டி மீட்டர் அளவுக்கு கொட்டி தீர்த்தது. இது 122 ஆண்டில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச மழை பொழிவாகும். இதே போல் சிதம்பரம் 31 செ.மீ, அண்ணாமலை நகர்(கடலூர்)28, சிதம்பரம் ஏடபிள்யூஎஸ் 27 செ.மீ, புவனகிரி 21 செ.மீ, காட்டு மன்னார் கோவில் (கடலூர்) தலா 19 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. வரலாறு காணாத மழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அரசு இயந்திரங்கள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டு அனைத்து பணிகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சீர்காழிக்கு காரில் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து அவர் இன்று காலை சீர்காழி, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.

Tags : CM ,M.K.Stal ,Chennai ,Sirkazhi ,Mayiladuthurai ,Cuddalore , Rainwater damage, drainage works, Chief Minister M.K.Stal's study in Chennai
× RELATED வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக...