×

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைக்கு 5 வீடுகள் சேதம்

விழுப்புரம்: விழுப்புரம் நகரப் பகுதியில் நேற்று முழுவதும் கன மழை  பெய்தது.  தொடர்ந்து பெய்த மழையினால்,  விழுப்புரம் மாவட்டம் பில்லூர் மந்தகரை கிராமத்தில் 500 வருட பழமை வாய்ந்த ஆலமரம்  நேற்று இரவு 12 மணியளவில்  வேரோடு வீட்டின் மேல் விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அப்பகுதியில் மின் கம்பிகள் அருந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரு கிராமங்களுக்கு இடையான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று திருவெண்ணைநல்லூர் வட்டம் சரவணப்பாக்கம் கிராமத்தில் வேலு மனைவி முத்துலட்சுமி கூரை வீடு, கண்ணாரப்பட்டு கிராமம் ராமசாமியின் மகன் கிருஷ்ணன் என்பவரின் கூரைவீடு, வைலாமூர் கிராமம் கிருஷ்ணமூர்த்தி மனைவி தனலட்சுமி என்பவரின் கூரைவீடு முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

செஞ்சி வட்டம் மீனாம்பூர் கிராமத்தை சேர்ந்த வனசேகர் மனைவி சசிகலா என்பவரின் வீடு, அஞ்சான்சேரி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சம்பத் என்பவரின் கூரைவீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்த கனமழையினால் மாவட்டம் முழுவதும் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Tags : Villupuram , 5 houses damaged due to heavy rain in Villupuram district
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு