×

மேட்டூரில் தொடர் மழையால் மீனவர்கள் முடங்கினர்

மேட்டூர்: மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மீன் பிடிக்க செல்ல முடியாமல் மீனவர்கள் முகாம்களில் முடங்கி உள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிபடும் கட்லா, ரோகு, மிர்கால், திலேபி, அரஞ்சான், ஆரால் உள்ளிட்ட பலவகையான மீன்களும் சுவை மிகுந்தவை. இதனால் தமிழகம் முழுவதும் மேட்டூர் மீன்களுக்கு நல்ல கிராக்கி உண்டு.  சுமார் 60 சதுர மைல் பரப்பு கொண்ட மேட்டூர் அணையில் 2016 மீனவர்கள் உரிமம் பெற்று மீன் பிடித்து வருகின்றனர். இவர்களுக்கு தனித்தனியே உதவியாளர்களும் உண்டு.
 
காவிரியின் இரு கரைகளிலும் மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்து வருகின்றனர். அடிபாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி, சின்னமேட்டூர், சேத்துக்குழி, மாசிலாபாளையம், கீரைக்காரனூர், ஏமனூர், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் குடும்பத்துடன் முகாமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லமுடியாமல் முகாம்களில் முடங்கி கிடக்கின்றனர்.

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதாலும் தங்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்கின்றனர். மீன்கள் பிடிபடாத காரணத்தால் சில மீனவர்கள் முகாம்களிலிருந்து வெளியேறி வேறு வேலைக்கு சென்றுள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மீன் கிடைக்காத காலங்களிலும், மீன் பிடிக்க செல்ல முடியாத காலங்களிலும் தங்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Mettur , Incessant rains paralyze fishermen in Mettur
× RELATED மேட்டூர் அருகே பரிதாபம்: மரத்தில் கார் மோதியதில் மகன், பெண் அதிகாரி பலி