×

சிவரக்கோட்டை அருகே தொடர்மழையால் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்

திருமங்கலம்: தொடர் மழையால் சிவரக்கோட்டை அருகே நேசனேரி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 11 மணிக்கு துவங்கிய மழை மாலை வரை நீடித்தது. தொடர்மழையால் திருமங்கலம் பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. திருமங்கலம் அருகே கமண்டலநதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது. இதனால் சிவரக்கோட்டை அருகேயுள்ள நேசனேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நேசனேரி கிராம மக்கள் கடும் சிரத்திற்குள்ளாகினர்.
 
டூவீலர் கூட தரைப்பாலத்தை கடந்து செல்ல இயலவில்லை. கிராம பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க 5 கி.மீ தூரம் சுற்றி சிவரக்கோட்டைக்கு வந்தனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் கமண்டலநதியில் தண்ணீர் பெருக்கெடுத்து தரைப்பாலம் மூழ்கிவருவதால் இதற்கு மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என நேசனேரி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தண்ணீர் வரத்து குறைந்ததால் தரைப்பாலத்திற்கு கீழே இன்று காலை தண்ணீர் சென்றது.

Tags : Sivarakottai , Land bridge submerged in water due to continuous rains near Sivarakottai
× RELATED திருமங்கலம் அருகே கிராமத்தில் புகுந்த புள்ளிமான்