×

3 நாட்கள் தொடர்ந்து கனமழை எதிரொலி; திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நீர் மட்டம் உயருகிறது: உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கம் கணிசமாக உயர்ந்து வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 1165 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வரத்து கால்வாய்கள் மூலமாக 670 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 53 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போதைய நிலவரப்படி 2794 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வரத்து கால்வாய்கள் மூலமாக 756 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து சென்னை மக்கள் குடிநீருக்காக 710 கன அடி வெளியேற்றப்பட்டு வருகின்றது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 351 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக வரத்து கால்வாய்கள் மூலமாக 211 கன‌ அடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2728 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 2187 கன அடி நீர் வருகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக ஏரியில் இருந்து 1180 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 108 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ‘’திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக விட்டு, விட்டு பெய்த கன மழையின் காரணமாக அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில், இன்றைய நிலவரப்படி 7538 மில்லியன் கன அடி  நீர் இருப்பு உள்ளது’ என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Thiruvallur district , 3 days of continuous heavy rain echo; Water level of lakes in Tiruvallur district rises: Excess water is discharged
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...