அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி வைத்த பேனர்கள் அகற்றம்: நகராட்சி நிர்வாகம் அதிரடி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அனுமதியின்றி வைத்த பேனர்களை நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று அகற்றினர். தமிழகத்தில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் பொருட்டு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மாதந்தோறும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில், தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்படி, அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் பிளக்ஸ் போடுகளை அப்புறப்படுத்துதல் என்ற ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

மேலும், பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் அப்புறப்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளி, கல்லூரிகளில் நடத்த வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட எஸ்.பி.கே பள்ளி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, திருச்சுழி ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில், நகர்நல அலுவலர் ராஜநந்தினி, நகர அமைப்பு ஆய்வாளர் ஜோதிமணி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி, சரத்பாபு, கண்ணன், சிக்கந்தர் ஆகியோர் அப்புறப்படுத்தினர். நகராட்சி அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டுகள், விளம்பர பலகைகள் வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அசோக்குமார் எச்சரித்துள்ளார்.

Related Stories: